கோவை: கோவை மாநகராட்சி தேர்தலில் எந்த வார்டிலும் 1,000 வாக்குகளை தாண்டாத மக்கள் நீதி மய்யம் கட்சி, போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையில் திமுகவின் தோல்விக்கு மக்கள் நீதி மய்யம் பிரித்த வாக்குகள் காரணம் என்று கூறும் அளவுக்கு மாநகராட்சி, அதனை ஒட்டிய பகுதிகளில் அக்கட்சி குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றது. திமுகவுக்கு கிடைக்க வேண்டிய கட்சி சாராத பொதுவான வாக்குகள் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது.
மநீம தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டதோடு, பல நாட்கள் இங்கேயே தங்கியிருந்து தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதன் தாக்கம் அருகில் இருந்த தொகுதிகளிலும் எதிரொலித்தது. கோவை மாநகராட்சிக்குள் வரும் கவுண்டம்பாளையம் தொகுதியில் 23,427 வாக்குகள், கோவை வடக்கில் 26,503 வாக்குகள், சிங்காநல்லூர் தொகுதியில் 36,855 வாக்குகளை பெற்று மநீம கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்துக்காக ஒரே ஒரு முறை மட்டுமே கோவை வந்த கமல்ஹாசன் ஹோட்டலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துவிட்டு, சிறிதுநேரம் பிரச்சாரம் செய்ததோடு புறப்பட்டுச் சென்றுவிட்டார். கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, சிங்காநல்லூர் ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டும் கோவை மாநகராட்சியின் 60 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியின் எந்த பகுதியிலும் மநீம எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
பல வார்டுகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் 100-க்கும் குறைவான வாக்குகளை பெற்றனர். யாரும் ஆயிரம் வாக்குகளை தாண்டவில்லை. அதிகபட்சமாக 81-வது வார்டில் போட்டியிட்ட கே.சிவமணி 983 வாக்குகள் பெற்றார். போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அக்கட்சியின் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.