கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும் போதும் சரி, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும் சரி சூதாட்டம், புகையிலை பொருள்கள் மற்றும் மதுபான வகை விளம்பரங்களில் நடித்தது கிடையாது. ஆனால் சச்சின் டெண்டுல்கர் படத்துடன் சமீபகாலமாக சூதாட்ட விளம்பரம் ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. இது குறித்து சச்சின் கவனத்திற்கு பல்வேறு தரப்பினரும் கொண்டு சென்றனர்.
இதையடுத்து சச்சின் டெண்டுல்கர் இது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளார். அதில், “நான் ஒரு போதும் சூதாட்டம், மதுபானம், புகையிலை பொருள்கள் தொடர்பான விளம்பரங்களில் நடித்தது கிடையாது. இது போன்ற விளம்பரங்களில் நான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கேற்றது இல்லை. நான் சூதாட்ட விளம்பரத்தில் நடித்தது போன்று வெளியாகி இருக்கும் விளம்பரம் போலியானது. எனது புகைப்படத்தை மார்பிங் செய்து இந்த விளம்பரத்தை தயாரித்துள்ளனர்.
இது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. மக்களை திசை திருப்பவேண்டும் என்ற நோக்கில் இது போன்ற விளம்பரம் வெளியாகி இருக்கிறது. இது போன்ற போலி விளம்பரங்கள் குறித்து மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எனது சட்ட வல்லுநர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள். ஆனாலும் உண்மையை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும் என்பதால் இதனைத் தெரிவிக்கிறேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் 25 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடினார். அவர் மொத்தம் 200 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 463 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியில் பல ஆண்டுகள் நட்சத்திர வீரராக இருந்தவரின் புகைப்படங்களே இப்படிப் பயன்படுத்தப்படுவது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.