சீமான், கமல்ஹாசன் கட்சி வாக்குகளை பறித்தது யார்?

தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும், சென்னையில் கனிசமாக வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகளின் வாக்குகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் கைவிட்டுப் போனதற்கு திமுகவின் அரசியல் உத்தியே காரணம் என்று கூறுகின்றனர்.

தமிழகத்தில் 2010ம் ஆண்டு சீமான் தலைமையில் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியும் 2018ம் ஆண்டு கமல்ஹாசன் தலைமையில் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யமும் எம்.எல்ல்.ஏ, எம்.பி. பதவிகளைக்கூட வெற்றிகொள்ளவில்லை என்றாலும் தேர்தல்களில் கனிசமான வாக்குகளை குவித்து பெரிய கட்சிகளைத் திரும்பிப் பார்க்க வைத்து வருகின்றன.

மக்கள் நீதி மய்யம் கட்சி 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மாநகரங்களில் 13% வரை வாக்குகளைப் பெற்று கெத்து காட்டியது, அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சி வட சென்னைப் பகுதிகளில் 10% வாக்குகளைப் பெற்று திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால், இம்முறை இந்த இரு கட்சிகளின் வாக்குகள் சரிந்ததோடு மட்டுமல்லாமல் இந்த வாக்குகள் திமுகவுக்கு மாறியுள்ளன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8-10% வாக்குகளைப் பெற்ற நிலையில், இந்த முறை 3-5% வாக்குகளை மட்டுமே பதிவு செய்ய முடிந்தது. இதேபோல், தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் சராசரியாக 10-13% வாக்குகளைப் பெற்றிருந்த மநீம 3-4% வாக்குகளைப் பதிவு செய்தது. அதைவிட முக்கியமானது என்னவென்றால், மக்கள் நீதி மய்யம் சென்னையில் பெரும்பாலான வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களைவிட குறைவாக 500க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றது. நாம் தமிழர் கட்சி பெரும்பாலான வார்டுகளில் சில நூறு வாக்குகள் மட்டுமே பெற்றது.

சென்னையில், மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் அதிக வாக்குகளைப் பெற்றிந்த நாம் தமிழர் கட்சி, மநீமவின் இந்த முறை அந்த வாக்குகள் அவர்கள் கைவிட்டுப் போனது ஏன்? இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். தலித் சமூகத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலிருந்து நாம் தமிழர் கட்சி பெரும்பாலும் சிதறிய வாக்குகளைப் பெற்றது. அதன் தலைவர் சீமான், 2021 சட்டமன்றத் தேர்தலில், ஆதி திராவிடர்கள் என்று அழைக்கப்படும் தலித்துகளுக்கு தமிழ் அடையாளத்தை வழங்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். இது நாம் தமிழர் கட்சிக்கு சிறிது நெருக்கத்தை அளித்தது.

திமுகவின் சமூக நீதி நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பிய சீமான், பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்களை நிறுத்துமாறு திமுகவுக்கு சவால் விடுத்திருந்தார். இவை அனைத்தும் வட சென்னையில் அடித்தட்டு மக்கள் நிறைந்த பகுதிகளில் அவருக்கு ஒரு கவனம் ஏற்பட்டது. அதிமுக மற்றும் திமுக இரண்டையும் விட நாம் தமிழர் கட்சி 15 சிறுபான்மை வேட்பாளர்களை நிறுத்தியது. இருப்பினும், திமுக தனது மேயர் பதவியை தலித்துகளுக்கு ஒதுக்கியதாலும், நாம் தமிழர் கட்சியை பாஜகவின் ‘பி டீம்’ என்று அழைத்து வலுவான சமூக ஊடகப் பிரச்சாரத்தாலும், வடசென்னை பகுதிகளிலும் மதுரவாயல் போன்ற புறநகர்ப் பகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் வாக்குகளைச் சிதைத்திருக்கலாம்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராஜன் ஊடகங்களிடம் கூறுகையில், “சிறிய அளவில் விளிம்புநிலை பிரிவினரின் வாக்குகள் குறைந்துள்ளன. உள்ளூர் பிரச்னைகளுக்காக மக்கள் வாக்களித்திருக்கலாம். திமுக ஆட்சி செய்வதால் அவர்களுக்கு திமுக விருப்பமாக இருக்கலாம்” என்றார்.

மநீம-வைப் பொறுத்தவரை, அதன் வாக்குகள் குறைந்ததற்கு பெரிய காரணம் குறைவாக வாக்கு பதிவானது காரணமாக இருக்கலாம். 2021 சட்டமன்றத் தேர்தலில் 60%க்கும் அதிகமான மக்கள் வாக்களித்தபோது, ​​அண்ணாநகர், வேளச்சேரி, ஆலந்தூர் மற்றும் மதுரவாயல் போன்ற முக்கிய பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் 10% வாக்குகளைப் பெற்றிருந்தது. இந்த முறை சென்னையில் அனைத்து பகுதிகளிலும் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

இருப்பினும், சென்னையில், சீமானின் நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசனின் மநீம வாக்குகளை யார் பறித்தது என்ற கேள்விக்கு, அவர்களின் வாக்குகள் குறைந்ததற்கு திமுகவின் உத்தியும் ஒரு முக்கிய காரணம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.