சென்னை: மத்திய அரசின் சுகாதாரத் துறை 12 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான CORBEVAX தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது. இன்று சென்னைக்கு வரப்பெற்ற 3 லட்சத்து 89 ஆயிரம் தடுப்பூசிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (24-02-2022) சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு குளிர்பதன நிலையத்திற்கு மத்திய அரசிடமிருந்து வரப்பெற்ற கரோனா பெருந்தொற்றைத் தடுக்கும் வகையில் 12 முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குச் செலுத்தப்படும் CORBEVAX தடுப்பூசியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியது:
மத்திய மற்றும் மாநில அரசுகள் 27 ஆண்டுகளாக ‘போலியோ இல்லாத இந்தியா – போலியோ இல்லாத தமிழகம்’ என்கிற நிலையில் இருந்து வருகிறது. முற்றிலுமாக போலியோ இல்லாமல் ஒழிக்க போலியோ சொட்டுமருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கி 18 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலை இருந்துகொண்டிருக்கிறது. அகில இந்திய அளவில் 11 ஆண்டுகளாக கடந்த 2011-ம் ஆண்டு முதல் போலியோ கண்டறியப்படவில்லை. ரோட்டரி போன்ற தன்னார்வ அமைப்புகள் மத்திய மற்றும் மாநில அரசுகளோடு இணைந்து சேவைத்துறைகளையும் இணைத்து எடுத்துக்கொண்டிருக்கிற தீவிர நடவடிக்கையின் காரணமாக, போலியோ இல்லாத இந்தியாவாக, தமிழகமாக இருந்துகொண்டிருக்கிறது.
தமிழக முதல்வர் போலியோ சொட்டு மருந்து முகாமினை வருகிற 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணியளவில் தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணி மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பல்வேறு சேவைத்துறைகள், குறிப்பாக அங்கன்வாடி மையங்கள், ஆசிரியர்கள் உதவியோடு 2.50 லட்சம் அரசு ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனர். இந்த முகாம்களில் 3000 எண்ணிக்கையிலான வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
தமிழகத்தில் பிறந்த குழந்தைகள் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 57 லட்சத்து 61 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துபோட வேண்டியிருக்கிறது. போலியோ சொட்டு மருந்து முகாம்கள் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 43 ஆயிரத்து 51 இடங்களில் நடைபெற உள்ளது. இதில் நிரந்தர மையங்கள் என்கிற வகையில் 40 ஆயிரத்து 368 இடங்களும், பயண வழி மையங்களாக 1474 இடங்களும், 696 நடமாடும் இடங்களிலும், தனியார் மருத்துவமனைகள் மற்றும் கட்டிடங்கள் என்கிற வகையில் 513 இடங்களிலும், 57.61 லட்சம் குழந்தைகளை மையப்படுத்தி போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் 15 வயதிற்குட்பட்ட அனைத்து வயதினருக்கான கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது நடைமுறையில் இருக்கிறது. ஜனவரி 3 அன்று 15 வயது முதல் 17 வயதினருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. முன்களப் பணியாளர்கள் – சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசிகள் ஜனவரி 10 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த இரண்டு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
மத்திய அரசின் சுகாதாரத் துறை 12 வயது முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி என்கிற வகையில் CORBEVAX என்கின்ற புதிய தடுப்பூசியை அங்கீகரித்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் 12 முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10 லட்சம் பேர் இருக்கிறார்கள். 21 லட்சத்து 66 ஆயிரம் தடுப்பூசிகள் என்று இலக்கு நிர்ணயித்து ஒதுக்கீடு செய்திருக்கிறது. சென்னைக்கு இன்று 3 லட்சத்து 89 ஆயிரம் தடுப்பூசிகள் வரப்பெற்று கையிருப்பில் உள்ளது. ஆனால் தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசிடமிருந்து இன்னும் வழங்கப்படவில்லை. அறிவிப்பு வந்தவுடன் உடனடியாக செயல்படுத்தப்படும்.
15 வயது முதல் 18 வயதினருக்கான தடுப்பூசிகள் 33 லட்சத்து 46 ஆயிரம் குழந்தைகளுக்கு செலுத்துவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் முதல் தவணை தடுப்பூசி 82.27 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 28 நாட்கள் கழித்து 2-வது தவணை தடுப்பூசி 37.64 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி முதல் தவணை 97.39 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 2-வது தவணை தடுப்பூசி 4 கோடியே 12 லட்சத்து 17 ஆயிரத்து 827 பேருக்கு 72.05 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 22 வாரங்களாக வாரந்தோறும் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த வாரம் 27-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதால், 26-ம் தேதி சனிக்கிழமை நடைபெற இருந்த 23-து கரோனா தடுப்பூசி முகாம் ஒத்திவைக்கப்படுகிறது. அடுத்த வாரம் நடைபெறும். ஆனாலும் கூட ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் போன்றவற்றில் தினந்தோறும் 3 ஆயிரத்து 534 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது. மேலும் தமிழகம் முழுவதும் 67 இடங்களில் டி.எம்.எஸ். வளாகம், அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்றவற்றில் 24 மணிநேரமும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென்றால் மேற்கண்ட இடங்களில் செலுத்திக்கொள்ளலாம்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 110 அறிவிப்புகளில் புதியதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, தென்காசி, கள்ளக்குறிச்சி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு இணை இயக்குநர் நலப்பணிகள் பணியிடங்கள் 1.11 கோடி செலவில் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு நிறைவேற்றப்பட்டு, இன்று பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் 6 மாவட்டங்களில் உள்ள இணை இயக்குநர் அலுவலகங்கள் நடைமுறைக்கு வர இருக்கிறது. அதற்கான பணி ஆணைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.