சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியல் வகுப்பு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், சென்னையில் வெற்றிபெற்றுள்ள 3 பட்டியல் வகுப்பு பெண்களின் பெயர்களை திமுக தலைமை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. மேயர் பதவி கவுன்சிலர்களாக மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படும். அதனால், ஆளும் திமுகவில் மேயர் யார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. குறிப்பாக தலைநகர் சென்னை மாநகராட்சியில் யார் என்ற எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன.
3 நூற்றாண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் மிக்க சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியல் வகுப்பு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மட்டுமல்லாமல் அவரே சென்னையின் முதல் தலித் பெண் மேயருமாவார். அதனால், சென்னை மேயர் பதவியை அலங்கரிக்கப்போகிறவர் யார் என்ற எதிர்ப்பார்ப்புகள் அரசியலிலும் மக்கள் மத்தியிலும் நிலவுகிறது.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 167 இடங்களில் போட்டியிட்ட திமுக 153 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில், திமுக சார்பில் வெற்றி பெற்ற பட்டியல் வகுப்பைச் சேர்ந்த 13 பெண் உறுப்பினர்கள் மேயர் ஆவதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இந்த 13 பேரில் சென்னை மேயர் பதவி யாருக்கு என்ற பேச்சு திமுகவிலும் மக்கள் பத்திலும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதில் திமுக தலைமை 3 பேர்களை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மாநகராட்சியில் திமுக சார்பில் வெற்றி பெற்ற 13 பட்டியல் வகுப்பைச் சேர்ந்த பெண்களில் 3 பேர் மட்டுமே பட்டதாரிகள். சென்னையில் 74வது வார்டில் வெற்றிபெற்றுள்ள பிரியா (28), எம்.காம் பட்டம் பெற்றுள்ளார். இவர் திரு.வி.க. நகர் தொகுதி முன்னள் எம்.எல்.ஏ செங்கை சிவத்தின் மகள். இவர்களின் குடும்பம் 40 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் விசுவாசிகளாக உள்ளனர். இவர் அமைச்சர் பி.கே.சேகர்ப் பாபுவின் சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் பிரியாவுக்கு மேயர் ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
அதே போல, சென்னை மாநகராட்சியில் 159வது வார்டில் வெற்றி பெற்றுள்ள மு.நந்தினி பி.ஏ., பி.எல். சட்டம் படித்துள்ளார். இதனால், நந்தினியும் சென்னை மேயருக்கான போட்டியில் பரிசீலிக்கப்படுகிறார்.
அதே போல, சென்னை மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணா நகர் மண்டலத்த்ல் 100வது வார்டில் வெற்றி பெற்றுள்ள வசந்தி பரமசிவம் கடந்த 2011-2016 கால கட்டத்தில் சென்னை கவுன்சிலராக இருந்துள்ளார். இவர் பிளஸ் 2 மட்டுமே படித்திருந்தாலும் இவருடைய பெயரையும் திமுக தலைமை மேயர் பதவிக்கு பரிசீலித்து வருகிறது. அதே போல, சிற்றரசுவின் பெயர் துணை மேயர் பதவிக்கான பட்டியலில் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையின் முதல் பெண் மேயர் மட்டுமல்ல, முதல் தலித் பெண் மேயர் என்ற பெருமையைப் பெறப்போகும் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர், பிரியாவா, மு.நந்தினியா, வசந்தி பரமசிவமா என்பது விரைவில் தெரியவரும் என்று வட்டாரங்கள் கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“