கீவ்:
உக்ரைன் மீது நேற்று போர் தொடங்கிய ரஷிய படைகள் தலைநகர் கீவ் பகுதியில் தாக்குதல்களை நடத்தின. ரஷிய விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்குள் சென்று வான்வழி தாக்குதலை நடத்தியது.
அங்குள்ள விமானத்தளங்கள் மற்றும் பாதுகாப்புத் தளங்களையும் ரஷியா
தாக்கியது. பதிலுக்கு உக்ரைன் ராணுவம், ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தினார்கள். இரு நாடுகளுக்கும் இடையே முதல் நாளிலேயே கடும் போர் நடந்தது. மத்திய கீவ் பகுதியில் அமைந்துள்ள ராணுவ அமைச்சக உளவுப்பிரிவு தலைமையகமும் ரஷியாவின் தாக்குதலுக்கு தப்பவில்லை.
நேற்று ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷியா நடத்தி உள்ளது என்று உக்ரைன் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
நேற்றைய தாக்குதல்களில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 68 பேர் பலியானதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உக்ரைன் மீதான முதல்நாள் போர் வெற்றிகரமாக நடைபெற்றதாக ரஷ்யா அறிவித்துள்ளது. படையெடுப்பின் முதல் நாள், உக்ரைனின் 11 விமான நிலையங்கள் உட்பட 74 ராணுவ கட்டமைப்புகள் செயலிழக்கச் செய்யப் பட்டதாகவும், முதல்நாள் போர் வெற்றியடைந்துள்ளதாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள செர்னோபில் நகரை ரஷிய படைகள் கைப்பற்றின. ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் செர்னோபில் அணுமின் நிலைய கழிவு பாதுகாப்பு பகுதியில் இருந்து கதிர்வீச்சு அதிகரித்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரி தெரிவித்துள்ளார்.