ஜனாதிபதி தலைமையில் உலக சாரணர் தின விழா , சான்றிதழ் வழங்கல்…

உலக சாரணர் தின விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தலைமையில் இன்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

சாரணர் இயக்கமானது, 172 நாடுகளைச் சேர்ந்த 52 மில்லியன் சிறுவர்களைக் கொண்ட சிறுவர்களுக்கான உலகின்  மிகப்பெரிய தன்னார்வ அமைப்பாகும். ஒரு சாரணர் பெறக்கூடிய மிக உயர்ந்த விருது, ஜனாதிபதி சாரணர் பதக்கம் ஆகும்.

இவ்விழாவில் கலந்துகொண்ட இலங்கையின் தலைமைச் சாரணர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு, சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி ஜனப்பிரித் பெர்ணான்டோ அவர்களால் சாரணர் கழுத்துப்பட்டி அணிவிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டது.

சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகரான பேடன் பவல் பிரபுவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி அவர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு சாரணருக்கும் ஜனாதிபதி சாரணர் விருதினை வழங்கினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சமாந்தரமாக மாகாண மட்டத்தில் ஒன்பது நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன், 700 ஜனாதிபதி சாரணர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அனைத்து மாகாணங்களையும் இணைய வழியில் நேரடியாக இணைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நடும் தேசிய சாரணர் நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவு செய்தமை தொடர்பான அறிக்கையை, உதவிப் பிரதம ஆணையாளர் பிரபாத் குணரத்ன ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பித்தார்.

ஒவ்வொரு சாரணர் வீட்டிலும் பசுமையான வீட்டுத்தோட்டத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் அடையாளமாக ஜனாதிபதி அவர்கள் மரக்கன்றுகளை விநியோகித்தார்.

பிரதம சாரணர் ஆணையாளர் ஜனபிரித் பெர்ணான்டோ அவர்கள், ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினார்.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, முன்னாள் பிரதம சாரணர் ஆணையாளர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், பிரதிப் பிரதம ஆணையாளர் எம்.எப்.எஸ். முஹீத் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

23.02.2022

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.