தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவ சிலைக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி உள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது, தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையலிான திமுக ஆட்சி இருப்பதால், ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்படுமா என்ற கேள்வி பலருக்கு இருந்தது.
ஏனென்றால், 2017ம் ஆண்டு முதல் 2021 வரை எடப்பாடி பழனிசாமி முதல்மைச்சராக இருந்த காலத்தில், 2018இல் மறைந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை ஒருபோதும் அரசு விழாவாக கொண்டாடியதில்லை என்பது தான் உண்மை.
இத்தகைய சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த விழாவில் முதல்வர் கலந்துகொள்வாரா அல்லது அமைச்சர்கள் யார் பங்கேற்பார்கள் என்ற விவாதம் கிளம்பியது.
இந்நிலையில் இன்று, சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள டாக்டர் ஜெ ஜெயலலிதா வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறையின் இயக்குனர் மகேஷன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயங்குநர் வீ.ப. ஜெயசீலன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin @mp_saminathan @jeyaseelan_vp pic.twitter.com/FcJfOEguWw
— TN DIPR (@TNDIPRNEWS) February 24, 2022
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கருணாநிதிக்கு செய்யாத மரியாதையை, தற்போதைய ஸ்டாலின் தலைமையிலான அரசு ஜெயலலிதாவுக்கு செய்திருப்பது பலரிடம் பாராட்டை பெற்றுள்ளது.