தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நிதியை மத்திய அரசு விரைந்து விடுவிக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இன்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்த பழனிவேல் தியாகராஜன் மார்ச் 31-ஆம் தேதிக்குள் நிலுவையில் உள்ள நிதிகள் விடுவிக்கப்பட்டால் அந்த தொகைகளை தமிழக அரசு அடுத்த மாதம் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் சேர்க்க முடியும் என தெரிவித்தார்.
இந்த நிதியாண்டில் நிலுவையில் உள்ள நிதிகள் விடுவிக்கப்படவில்லையானால், அந்த தொகைகளை அடுத்த பட்ஜெட்டில் தான் கணக்கில் சேர்க்க முடியும் என பழனிவேல் தியாகராஜன் விளக்கினார். உள்ளாட்சி களுக்கான நிதி, நிவாரண நிதிகள், மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் தமிழகத்தின் பங்கு உள்ளிட்ட பல்வேறு கணக்குகளில் தமிழகத்துக்கான நிதிகள் நிலுவையில் உள்ளன.
நிதித்துறை செயலாளர் சோமநாதன் உள்ளிட்ட நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்த தமிழக நிதி அமைச்சர், தமிழகத்துக்கான திட்டங்களுக்கு விரைவில் நிதி ஒதுக்கீடுகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள விதிகளை மத்திய அரசு விரைவில் விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த சந்திப்பின்போது தமிழக நிதி அமைச்சகத்தின் கூடுதல் தலைமைச் செயலர் முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனைகளில் பங்கேற்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM