புதுடெல்லி: தமிழகத்தை பாஜக ஆளமுடியாது என்று ராகுல்காந்தி கூறியது தவறு என்று பாஜக கூறியுள்ளது. தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளது. திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக அதிகமான வார்டுகளை பாஜக வென்றுள்ளது.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘தமி ழகத்தை பாஜக ஒரு காலத்திலும் ஆள முடியாது’ என்று குறிப் பிட்டிருந்தார். ஆனால், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ள நிலையில், ராகுல் காந்திக்கு பாஜக பதில் அளித்துள்ளது.
பாஜக தேசிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மால்வியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘‘சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி தமிழகத்தை பாஜக ஆள முடியாது என்று பேசியிருந்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக காங்கிரசை விட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன் வெற்றி பெறாத இடங்களில் கூட வெற்றிபெற்று 3-வது பெரிய கட்சியாக தமிழகத்தில் பாஜக உருவெடுத்துள்ளது. இதை பார்க்கும்போது தமிழகத்தை பாஜக ஆள முடியாது என்று ராகுல் காந்தி கூறிய கருத்து தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
– பிடிஐ