தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்கும் முயற்சியில் அவசரமாக தலையிட வேண்டும் – மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
நாகப்பட்டினம், கோடியக்கரை கிராமத்தை சேர்ந்த 4 மீனவர்கள் 17.2.2022 அன்று பிற்பகல் 3 மணியளவில், கோடியக்கரை கடற்கரையில் இருந்து சுமார் 8 கடல் மைல் தூரத்தில் தங்களுடைய பைபர் படகில் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது இலங்கையை சேர்ந்த அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல் நடத்தி, தமிழக மீனவர்களுக்கு சொந்தமான ஜி.பி.எஸ். கருவி, மீன்பிடி சாதனங்கள், எரிபொருள் மற்றும் 2 செல்போன்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மற்றொரு சம்பவத்தில் ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை கிராமத்தில் இருந்து மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற 6 தமிழக மீனவர்கள் 18.2.2022 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள மயிலாட்டிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 30 நாளில் நடைபெற்ற 4 சம்பவங்களில் 7 மீன்பிடி படகுகள் சிறைபிடிக்கப்பட்டு தமிழ்நாட்டை சேர்ந்த 47 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவங்கள் ஒட்டுமொத்த மீனவ சமுதாயத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீனவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல் நடத்துவதும், அவர்களுடைய உடைமைகளை கொள்ளையடிப்பதும் சட்டத்துக்கு புறம்பான செயல் மட்டுமல்லாது, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதாகவும் உள்ளது. இப்பிரச்சினை குறித்து இலங்கை அரசின் உயர்மட்ட அளவில் உள்ளவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை விரைவில் விடுவிக்க, இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை அவசரமாக தலையிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.