சென்னை: சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயரை தேர்வு செய்யும் பணியில் திமுக தலைமை ஈடுபட்டுள்ளது. அதில் 3 பேரின் பெயர்களை பரிசீலித்து வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் கூறப்படுகிறது. இந்தியாவிலேயே பழமையானது சென்னை மாநகராட்சி. இது 334 ஆண்டுகள் பாரம்பரியம்மிக்கது. தமிழகத்திலேயே பொது சுகாதாரத்துக்கு வழிகாட்டியாக சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை விளங்கி வந்தது.
சென்னை மாநகராட்சியில் இதுவரை பெண்கள் யாரும் மேயராக இருந்ததில்லை. முதல் முறையாக பெண் ஒருவர் வரும் மார்ச் 4-ம் தேதி மேயராக பதவியேற்க உள்ளார். அதிலும் இந்த பெருமை மிக்க பதவியில் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் அமர இருப்பது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. தற்போது நடந்து முடிந்துள்ள சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக 167 இடங்களில் போட்டியிட்டு 153 இடங்களில் வென்று சென்னை மாநராட்சியை தன்வசமாக்கியுள்ளது.
வெற்றி பெற்ற திமுக உறுப்பினர்களில் மேயர் ஆகும் தகுதியை 13 பேர் பெற்றுள்ளனர். இவர்களில் யாருக்கு மேயர் பதவி கிடைக்கப்போகிறது என்பதை அறிந்து கொள்வதில் திமுகவினர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சென்னை மாநகர மக்களின் ஆவலாகவும் உள்ளது. இந்த போட்டியில் திமுக தலைமை 3 பேரை தேர்ந்தெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் ஒருவர் மேயராவது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக திமுகவினர் கூறியதாவது: மேயர் ஆவதற்கு தகுதி பெற்ற 13 பேரில் 2 பேர் மட்டுமே பட்டதாரிகள். 74-வது வார்டில் வெற்றிபெற்றுள்ள ஆர்.பிரியா (28), திரு.வி.க.நகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் மகள். இக்குடும்பம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் உள்ளது. எம்.காம் பட்டமும் பெற்றுள்ளார். இவர், பி.கே.சேகர்பாபு மாவட்ட செயலராக உள்ள சென்னை கிழக்கு மாவட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். முதல்வருக்கு நெருக்கமான பி.கே.சேகர்பாபுவின் ஆதரவாளராகவும் இருப்பதால் இவருக்கு மேயர் பதவி வழங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் 159-வது வார்டில் வெற்றி பெற்றுள்ள மு.ஆ.நந்தினியும் பி.ஏ. பிஎல் படித்துள்ளார்.
அதனால் இவரும் மேயருக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளார். சென்னை மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட, அண்ணா நகர் மண்டலத்தில் இடம்பெற்றுள்ள 100-வது வார்டில் வெற்றி பெற்றிருப்பவர் வசந்தி பரமசிவம். இவர் ஏற்கெனவே கடந்த 2011-16 காலகட்டத்தில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். பிளஸ் 2 வரை படித்திருந்தாலும் மாமன்ற நடவடிக்கைகள் குறித்த அனுபவம் பெற்ற இவரை மேயராக்கலாம்என திமுக தலைமை கருதுகிறது. இந்த வார்டு நே.சிற்றரசு மாவட்ட செயலராக உள்ள பகுதியில் வருகிறது. இந்த 3 பேரில் ஒருவரை தேர்வு செய்ய கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். மேலும் நே.சிற்றரசுவின் பெயர் துணை மேயர் பதவிக்கான பட்டியலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.