திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் சர்வ தரிசன டிக்கெட்டுகளை வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து வாங்கி விடுகின்றனர். ஆனால், அவர்கள் தரிசனம் செய்ய 3 அல்லது 4 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
திருப்பதியில் 3 அல்லது 4 நாட்கள் வரை தங்குவதற்கும், ஓட்டல்களில் உணவு உண்ப தற்குமே கொண்டு வந்த பணம் கரைந்து விடுகிறது. இதனால், பலர் அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், அல்லது நிவாசம், கோவிந்தராஜர் சத்திரம் ஆகிய இடங்களில் உணவை சமைத்து, அங்கேயே படுத்து உறங்கி அந்த 4 நாட்களை கஷ்டப்பட்டு கழித்து, குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதனை எதிர்பார்க்காமல் திருப்பதிக்கு வந்து விட்ட பக்தர்களில் சிலர், திருமலைக்கு செல்லாமலேயே திருச்சானூர் பத்மாவதி தாயார், கபிலேஸ்வரர், நிவாச மங்காபுரம் என சில கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து ஊர் திரும்பி விடுகின்றனர்.
தற்போது சர்வ தரிசனத்துக்காக இன்று முதல் தினமும் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் திருப்பதியில் நேரடியாக வழங்கப்படுகிறது. அந்த டிக்கெட்டில் 3 அல்லது 4 நாட்களுக்கு பின்னரே தரிசன தேதி குறிப்பிட்டிருக்கும். இதனால், பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, சர்வ தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களை வழக்கம்போல் திருமலைக்கு அனுமதிக்க வேண்டும். அவர்கள் வைகுண்டம் காம்ப்ளக்ஸில் இருந்தால், தங்க இடமும், உண்ண உணவும் தேவஸ்தானம் வழங்கி விடும். ஆதலால், ஓரிரு நாட்கள் ஆனாலும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் தாமதமானாலும் சுவாமியை தரிசித்து விட்டு மகிழ்ச்சியாக ஊர் திரும்புவார்கள் என திருப்பதிக்கு வந்து தங்கியுள்ள பக்தர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் தாமதம்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் நேற்று காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நேற்று காலை 9 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஏற்கனவே அறிவித்தபடி பக்தர்கள் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய முனைந்தனர். ஆனால், தொழில்நுட்ப கோளாறால் மதியம் 12 மணிக்குத்தான் பக்தர்கள் முன்பதிவு செய்ய முடிந்தது. வழக்கம்போல் சில நிமிடங்களிலேயே மார்ச் மாதத்திற்கான ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. |