திருப்பதியில் நேரடி இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக 3 இடங்களில் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கி செல்கின்றனர். ஆனால் அவர்கள் தரிசனம் செய்ய 3 அல்லது 4 நாட்கள் வரை காத்திருக்க வேண்டி உள்ளது.

இதனால் திருப்பதியில் 3 அல்லது 4 நாட்கள் விடுதிகளில் தங்குவதற்கும், ஓட்டல்களில் உணவு உண்பதற்கும் கொண்டு வந்த பணம் கரைந்து விடுகிறது.

பலர் டிக்கெட் வழங்கும் கவுண்டர் பகுதி அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் அல்லது சீனிவாசம், கோவிந்தராஜ சாமி சத்திரம் ஆகிய இடங்களில் உணவை சமைத்து அங்கேயே படுத்து தூங்கி 4 நாட்களை கஷ்டப்பட்டு கழிக்கின்றனர்.

இதனை எதிர்பார்க்காமல் திருப்பதிக்கு வந்துவிட்ட பக்தர்களில் சிலர் திருமலைக்கு செல்லாமலேயே திருச்சானூர், பத்மாவதி தாயார், கபிலேஸ்வரர் சாமி, சீனிவாசமங்காபுரம் என சில கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து திரும்பி வருகின்றனர்.

இலவச தரிசனத்திற்காக இன்று முதல் தினமும் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் திருப்பதியில் நேரடியாக வழங்கப்படுகிறது. அந்த டிக்கெட்டில் 3 அல்லது 4 நாட்களுக்குப் பின்னரே தரிசனம் செய்ய நாள், நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களை வழக்கம்போல் திருமலைக்கு அனுமதிக்க வேண்டும். அவர்கள் ஸ்ரீ வைகுண்டம் காம்ப்ளக்சில் இருந்தால் தங்க இடமும், உண்ண உணவும் தேவஸ்தனம் வழங்கிவிடும்.

அதனால் ஓரிரு நாட்கள் ஆனாலும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் தாமதமானாலும் சாமியை தரிசித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்புவார்கள் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.