புதுடெல்லி:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் முறைகேடுகளை களையும் வகையில் குறை தீர்ப்பு செயலியை மத்திய ஊரக வளர்ச்சித் துறை மந்திரி கிரிராஜ் சிங் நேற்று தொடக்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, பல தரப்பிலிருந்து பெறப்படும் புகார்களை எளிதாக வகைப்படுத்தி தெரிவிக்கும் வகையில், இந்த குறை தீர்ப்பு செயலியை ஊரக மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்.
இந்த திட்டத்தின் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மையை உறுதி செய்ய குறைதீர்ப்பு செயலி உதவியாக இருக்கும். பல மாவட்டங்களில் குறை தீர்ப்பாளர் நியமிக்கப்படவில்லை. இந்தப் பதவிக்கு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவதாக மத்திய அரசுக்குத் தெரிய வந்தது.
இதனால் குறை தீர்ப்புச் செயலியைப் பயன்படுத்தி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை அதிக வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவதில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.