இன்றுகாலை உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தொடுக்கத் தொடங்கியது. விமான தளங்களை கைப்பற்றியது, உக்ரைன் வீரர்களை கொன்றது என தொடர்ந்து முன்னேறி தற்போது உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட இடங்களில் ரஷ்ய படைகள் தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. இந்த பதற்றமான சூழலால், அங்கு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக, உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேற முடியாமல் இந்தியாவைச் சேர்ந்த 20,000 மாணவர்கள் அங்குச் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களை மீட்பது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த போர் விவகாரத்தில் இந்தியா இன்னும் எவ்வளவு காலம் மௌனமாக இருக்கும்? ரஷ்யா ஒரு ஆட்சிமாற்ற நடவடிக்கை நடத்துகிறது.
இந்த போரை ஏற்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது. மேலும், தேர்தலில் கவனம் செலுத்துவதை விடவும் அங்குச் சிக்கித் தவிக்கும் 20,000 இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் மோடி தலையிட வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
அதேபோல, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மனிஷ் திவாரி, “1956-ல் ஹங்கேரி மீதும், 1968-ல் செக்கொஸ்லோவாக்கியா மீதும், 1976-ல் ஆஃப்கானிஸ்தான் மீதும் சோவியத் யூனியன் படையெடுத்தபோது இந்தியா கண்டிக்கத் தவறியது.
அதே தவறை இப்போதும் செய்யக்கூடாது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைச் சந்தேகமின்றி கண்டிக்க வேண்டும். பூஜ்ய வெப்ப நிலையில் தவிக்கும் மாணவர்களை மீட்க வேண்டும்” என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.