நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் சேவாபாரதி பகுதியை சேர்ந்தவர் சிவா.
இவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகை துறைமுகத்தில் இருந்து அதே பகுதியை சேர்ந்த சின்னத்துரை (வயது 60), சிவபாரதி (27), சவுந்தரராஜன் (34), நாகை நம்பியார் நகரை சேர்ந்த பிரகாஷ் (35), செல்வம் (45), அக்கரைபேட்டையை சேர்ந்த செல்வநாதன் (29), ரெத்தினசாமி (34), சந்திரபாடியை சேர்ந்த அய்யப்பன் (40), முருகேசன் (55) ஆகிய 9 மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
நேற்று இரவு கச்சத்தீவு அருகே கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக உங்களை கைது செய்கிறோம் என கூறினர். அதற்கு தமிழக மீனவர்கள் நாங்கள் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் தான் மீன் பிடிக்கிறோம் என்றனர். இதனை ஏற்க மறுத்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சின்னத்துரை உள்பட 9 மீனவர்களையும் கைது செய்து யாழ்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். படகையும் பறிமுதல் செய்தனர்.
இந்த பரபரப்பு சம்பவம் அடங்குவதற்குள் மீண்டும் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக 13 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர்.
காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நேற்று மாலை காரைக்காலை சேர்ந்த வீரமணி (35) என்பவர் தனது படகில் செல்வமணி, ரமேஷ், தீலிபன், நாகையை சேர்ந்த சத்தியநாதன், நிலவரசன், சுரேஷ் , நவின்குமார், பால்மணி, கவியரசன், ஆறுமுகசாமி, கிஷோர், கோகுல் ஆகிய 12 பேருடன் படகில் மீன்பிடிக்க புறப்பட்டார். தமிழக எல்லையான கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது வந்த இலங்கை கடற்படை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி வீரமணி, செல்மணி உள்பட 13 மீனவர்களையும் கைது செய்து படகையும் பறிமுதல் செய்தனர்.
ஒரே நாளில் அடுத்தடுத்து 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். இதையடுத்து கைதான மீனவர்களுக்கு முதல் கட்டமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர் மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.