தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியதுடன் பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சிகளையும் பிடித்துள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் உள்ள 12,607 வார்டுகளுக்கு கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), மதிமுக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் திமுக களம் கண்டது. பாஜக கழண்டுகொண்ட நிலையில், இதரக் கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக இந்தத் தேர்தல் களத்தைச் சந்தித்தது. பாஜக, அமமுக, பாமக, தேமுதிக, மநீம, நாதக ஆகியவை தனித்தனியாகக் களத்தில் நின்றன.