உக்ரைன் – ரஷ்யா விவகாரம் கவலை அளிப்பதாகவும், இந்த விவகாரத்தில் நடுநிலை காப்பதாகவும், அமைதியான தீர்வு ஏற்படும் என நம்புவதாகவும் இந்தியா தெரிவித்துள்து.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக் குறித்துச் செய்தியாளர்களின் வினாவுக்கு வெளியுறவு இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் பதிலளித்தார். அப்போது உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் இந்தியா நடுநிலை காப்பதாகத் தெரிவித்தார். இந்தச் சிக்கலுக்கு அமைதியான தீர்வு ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இது குறித்து நியூயார்க்கில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் பேசிய இந்திய பிரதிநிதி திருமூர்த்தி, உக்ரைன் – ரஷ்ய விவகாரத்தால் அப்பகுதியில் அமைதியும் பாதுகாப்பும் சீர்குலைந்து விடும் எனக் கவலை தெரிவித்தார்.
உடனடியாகப் பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்றும், மேற்கொண்டு எந்த நடவடிக்கையிலும் இறங்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இருநாட்டு வெளியுறவு அதிகாரிகளின் தொடர்ச்சியான பேச்சுக்கள் மூலம் இதற்குத் தீர்வுகாண வேண்டும் என்றும் திருமூர்த்தி வலியுறுத்தினார்.