கிவ்: “இரண்டாம் உலகப் போரில் நாஜி படைகள் தாக்கியதுபோல் எங்கள் நகரை ரஷ்யா தாக்கியுள்ளது” என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய மொழியில் பேசினார். உக்ரைன் மீதான தாக்குதலை நிராகரிக்குமாறு ரஷ்ய மக்களுக்கு வீடியோவில் நேரடி வேண்டுகோள் விடுத்தார்.
ரஷ்யர்களை நோக்கி அவர், “நீங்கள் எதற்காக, யாருடன் சண்டையிடுகிறீர்கள்? உங்களில் பலர் உக்ரைனுக்குச் சென்றிருக்கிறீர்கள். உங்களில் பலருக்கு உக்ரைனில் குடும்பம் உள்ளது. சிலர் உக்ரைனின் பல்கலைக்கழகங்களில் படித்தீர்கள். உங்களுக்கு உக்ரைன் நண்பர் ஒருவர் இருப்பார். எங்கள் குணம் உங்களுக்குத் தெரியும். எங்கள் மக்களை நீங்கள் அறிவீர்கள். எங்கள் கொள்கைகளை நீங்கள் அறிவீர்கள். நாங்கள் எதை மதிக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, நீங்களே கேளுங்கள்… காரணத்தைக் கேளுங்கள்” என்று பேசினார்.
இந்த நிலையில், உக்ரைனின் வேண்டுகோளை மீறி ரஷ்யா இன்று தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், “இரண்டாம் உலகப் போரில் நாஜி படைகள் தாக்கியதுபோல் இன்று காலை ரஷ்யா எங்களது நகரை தாக்கியது.
ரஷ்யா தீய பாதையில் பயணிக்கிறது. ரஷ்யா என்ன நினைத்தாலும் உக்ரைன் விட்டுத் தராது. நாட்டைக் காக்க விரும்பும் எவருக்கும் ஆயுதம் அளிப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.