பதுங்கு குழிகளில் பாதுகாப்பாக இருங்கள்- உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

கீவ்:
உக்ரைனுக்குள் ரஷிய படைகள் ஊடுருவி உக்கிரமான தாக்குதலை நடத்தி வருவதால் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் போர் விமானங்களின் சத்தம், வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது. வான்எல்லை மூடப்பட்டதால் உக்ரைனில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைனில் தங்கியிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பது தொடர்பாக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் புதிய ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.
அதில், ‘உக்ரைனில் ராணுவச் சட்டம் அமலில் இருப்பது உங்களுக்குத் தெரியும். மக்கள் வெளியே வருவது கடினம். தலைநகர் கீவில் தங்குவதற்கு இடமின்றி தவிக்கும் மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். சில இடங்களில் ஏர் சைரன்கள், வெடிகுண்டு எச்சரிக்கைகள் கேட்கின்றன. நீங்கள் அத்தகைய சூழ்நிலையை எதிர்கொண்டால், அந்தந்த இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்கவேண்டும். அவரவர் தங்கியிருக்கும் இடங்களின் அருகில் உள்ள பதுங்கு குழிகளின் பட்டியல் கூகுள் மேப்பில் உள்ளது, அவற்றில் பல நிலத்தடி மெட்ரோ நிலையங்களில் அமைந்துள்ளன. ஆபத்தான சூழலை எதிர்கொள்ளும்போது அந்த பதுங்கு குழிகளில் தங்கிக் கொள்ளுங்கள்.
தயவுசெய்து உங்கள் பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து எச்சரிக்கையாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள். தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியேறாதீர்கள். உங்கள் ஆவணங்களை எல்லா நேரங்களிலும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்’ என்று தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.