கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள சமயத்தில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சென்றிருப்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா இன்று தாக்குதலை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகள் விதித்துள்ளன. பிரச்னைக்குரிய இச்சூழலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது பயணத்தை ரத்து செய்யாமல் திட்டமிட்டபடி மாஸ்கோவிற்கு சென்றுள்ளார். மேலும் அதிபர் புடினை சந்திக்க ஆர்வமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 23 ஆண்டுகளில் ரஷ்யாவுக்கு சென்றுள்ள முதல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் ஆவார்.
அவரது ரஷ்ய பயணம் குறித்து அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதாவது: உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பற்றி எங்களது நிலைப்பாட்டை பாகிஸ்தானிடம் தெரிவித்துள்ளோம். போருக்கு பதிலாக பேச்சுவார்த்தையை தொடர்வதற்கான எங்களின் முயற்சி குறித்தும் அவர்களுக்கு விளக்கியுள்ளோம். உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஒவ்வொரு பொறுப்புள்ள நாட்டின் கடமை. இவ்வாறு கூறியுள்ளார். மேலும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் போர் சூழலில் புடின் உடனான பாகிஸ்தான் பிரதமரின் சந்திப்பை விரும்பவில்லை.
Advertisement