பாதுகாப்பாக இருங்கள்: இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை| Dinamalar

கீவ்: உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி, அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: உக்ரைனில் தற்போதைய நிலை நிச்சயமற்றதாக உள்ளது. இதனால், அனைவரும் தயவு செய்து அமைதியாக இருப்பதுடன், வீடு, ஓட்டல், விடுதி என எங்கு இருந்தாலும் அங்கேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

பல நகரங்களில் இருந்து கீவ் நகருக்கு செல்பவர்கள் மீண்டும், தங்களது இடங்களுக்கு தற்காலிகமாக செல்ல வேண்டும். மேற்கத்திய நாடுகளின் எல்லை பகுதியில் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டில்லியில் கட்டுப்பாட்டு அறை

உக்ரைனில் உள்ள இந்தியர்களின் உதவிக்காக டில்லியில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கட்டுப்பாட்டு அறையை 1800118797 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 91 11 23012113, 91 11 23014140, 91 1123017905 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா நடுநிலை வகிக்கும்

இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் கூறியதாவது: ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும். அமைதியான முறையில் தீர்வு ஏற்படும் என நம்புகிறோம். இவ்வாறு ஆர்ஆர் சிங் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.