உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த போர் விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிட்டால் அவர்களும் அதன் விளைவைச் சந்திக்க நேரிடும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், உக்ரைன் நாட்டில் நுழைந்த ரஷ்ய ராணுவ வீரர்கள் பல இடங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இந்த போர் காரணமாக விமானப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உலக நாடுகள் தொடர்ந்து தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன. அந்த வகையில், ரஷ்யாவில் அதிபர் புதினின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதனால், ரஷ்ய அதிகாரிகள் மக்களை கடுமையாக எச்சரித்து வருகின்றனர்.
“அதிபர் புதினின் உக்ரைனுக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் யாரும் போராடக் கூடாது. மீறி அரசுக்கு எதிராகச் செயல்பாட்டால் அவர்கள் சட்ட விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என ரஷ்ய அதிகாரிகள் எச்சரித்திருக்கின்றனர்.