சென்னை:ரஷ்யா – உக்ரைன் இடையில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக, தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் விலை உச்சத்தை தொட்டது. ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு, 1,856 ரூபாய் உயர்ந்தது. 1 சவரன் 39 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்பனையானது.
சமையல் எண்ணெய் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை உள்ளது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இடம்பெற்றுள்ள, ‘நேட்டோ’ அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்திருந்தது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் எல்லையில் தன் படைகளை ரஷ்யா நிறுத்தி வைத்திருந்தது. இதனால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. பதற்றத்தை தணிக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ரஷ்யாவுடன் பேச்சு நடத்தின; பொருளாதார தடைகளையும் விதித்தன. ஆனால் இதற்கெல்லாம் மசியாத ரஷ்யா, உக்ரைன் மீது திடீரென தாக்குதல் நடத்த துவங்கிஉள்ளது. இது, சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச நிலவரங்களைப் பொறுத்து, சர்வதேச சந்தைக்கு ஏற்ப நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் நீடித்து வந்ததால் சில தினங்களாக உள்நாட்டில் தங்கம் விலை அதிகரித்து வந்தது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம், 4,719 ரூபாய்க்கும்; சவரன், 37 ஆயிரத்து, 752 ரூபாய்க்கும் விற்பனையாகின. ஒரு கிராம் வெள்ளி, 68.70 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் ரஷ்யா – உக்ரைன் இடையில் நேற்று அதிகாலை போர் மூண்டது. இதனால் உலக முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பங்குச் சந்தை முதலீடுகளை தவிர்த்து, தங்கத்தில் அதிக முதலீடு செய்ய துவங்கியதால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தது.
இதன் விளைவாக, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் தங்கம் கிராமுக்கு, 232 ரூபாய் அதிகரித்து, 4,951 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு அதிரடியாக, 1,856 ரூபாய் உயர்ந்து, 39 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் தங்கம் விலை இவ்வளவு அதிகரித்தது இதுவே முதல்முறை. வெள்ளி கிராமுக்கு, 4 ரூபாய் உயர்ந்து, 72.70 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
தமிழகத்தில் தற்போது திருமண சீசன் இருப்பதால், திருமணம் வைத்திருப்போர் நகைகளை வாங்கி வருகின்றனர். இந்த சூழலில் தங்கம் விலை உயர்ந்து வருவது, திருமண வீட்டாரிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகைகள் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:ரஷ்யா, உக்ரைன் இடையில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக, சர்வதேச அளவில் பொருளாதாரம் சார்ந்த பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டிருப்பதால், முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், தங்கம் விலை அதிகரித்துஉள்ளது. ஒரே நாளில் தங்கம் விலை இவ்வளவு அதிகரித்தது இதுவே முதல்முறை. இதே நிலை நீடித்தால், தங்கம் விலை புதிய உச்சத்தை தொடும்.இவ்வாறு அவர் கூறினார்.
சமையல் எண்ணெய் உயரும்?
இந்தியா இறக்குமதி செய்யும் சூரியகாந்தி சமையல் எண்ணெயில், 70 சதவீதம் உக்ரைனில் இருந்து பெறப்படுகிறது. அதற்கடுத்து, 20 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்தும், 10 சதவீதம் அர்ஜென்டினாவிடம் இருந்தும் பெறப்படுகின்றன.வழக்கமாக உக்ரைனிடம் இருந்து மாதத்துக்கு, 2 முதல் 3 லட்சம் டன் சமையல் எண்ணெய் வாங்கப்படும். இந்த மாதம் உக்ரைனில் இருந்து எண்ணெய் வரவில்லை. ரஷ்யாவிடம் இருந்து வாங்கலாம். ஆனால், உலக நாடுகள் அதற்கு பொருளாதார தடை விதிக்கும்போது, அதுவும் பாதிக்கப்படும்.
அதனால், சமையல் எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டு, தட்டுப்பாடு ஏற்படலாம். இதனால், அதன் விலை இந்தியாவில் கடுமையாக உயரும் அபாயம் உள்ளது. இதுபோல, பல பொருட்களின் இறக்குமதி பாதிக்கப்படுவதுடன், நம் நாட்டில் இருந்து மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியும் பாதிக்கப்படும்.
Advertisement