சென்னை தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் கடந்த 19-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தபோது கள்ள ஓட்டு போட வந்ததாக தி.மு.க. தொண்டர் நரேஷ்குமாரை, அதிமுகவினர் பிடித்தனர். பின்னர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் நரேஷின் சட்டையை கழற்றி சாலையில் இழுத்துச் சென்றனர். இந்த காணொலி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் ஜெயக்குமார் கைது
இதையடுத்து, நரேஷ் அளித்த புகாரின் பேரில், ஜெயக்குமார் மற்றும் அ.தி.மு.க.வினர் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், கடந்த 21ஆம் தேதி இரவு ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
நுங்கப்பாக்கம் காவல் நிலையத்தில் ஜெயக்குமாரிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸ், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை மார்ச் 9 ஆம் தேதி காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து, பூந்தமல்லி சிறையில் ஜெயக்குமாரை அடைத்தனர். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, சிறையில் முதல் வகுப்பு வழங்கிய நீதிபதி உத்தரவிட்டார்.
மற்றொரு வழக்கில் கைது
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ராயபுரம் போலீசார் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்து கைது செய்தனர். ஜெயக்குமார் தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட விவகாரத்தில், ராயபுரம் போலீசார் அவர் மீது அனுமதியின்றி கூட்டம் கூடுதல், பெருந்தொற்று காலத்தில் நோய் பரப்பும் விதமாக கூடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜாமீன் மனு தள்ளுபடி
இந்நிலையில், தி.மு.க. தொண்டரை தாக்கிய வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு விசாரணையின்போது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சென்னை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல்
இதையடுத்து, ஜெயக்குமார் தரப்பில் ஜாமீன் கோரி சென்னை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு ஒரிரு நாளில் விசாரணைக்கு வர உள்ளது.
அதேபோல், சாலை மறியலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பிற்கு மனு நகலை வழங்கவும், விளக்கம் அளிக்கவும் அவகாசம் வழங்கி வழக்கு தள்ளிவைப்பதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புழல் சிறைக்கு மாற்றம்
இதற்கிடையே, நேற்று மாலை திடீரென பூந்தமல்லி தனி கிளை சிறையிலிருந்து ஜெயக்குமார் புழல் சிறைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார்.