பெங்களூரு-ஜப்பானின், ‘மியாவாகி’ எனப்படும் அடர்வன காட்டை உருவாக்க பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் திட்டமிட்டுள்ளது.ஒரு காலத்தில், ‘பூங்கா நகர்’ என பெயர் பெற்ற பெங்களூரு நகர், தற்போது காங்கிரீட் காடாக மாறியுள்ளது. பசுமையை காண முடியவில்லை. இழந்த பசுமையை மீண்டும் கொண்டு வர, மாநகராட்சியும் பல நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்கிடையில், நகரை பசுமையாக்குவதில், தன் பங்களிப்பை அளிக்க பி.எம்.ஆர்.சி.எல்., திட்டமிட்டுள்ளது. தனக்கு சொந்தமான, அரை ஏக்கர், ஒரு ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகள் நட்டு, வனம் உருவாக்க தயாராகி வருகிறது.மிகவும் குறைந்த இடத்தில், அதிகமான மரக்கன்றுகளை நட்டு, அடர்த்தியான காட்டை உருவாக்கும் தொழில்நுட்பத்தை, ஜப்பான் தாவரவியல் வல்லுனர் அகிரா மியாவாகி உருவாக்கினார். இது, மியாவாகி தொழில்நுட்பம் என்றே பிரபலம் அடைந்தது. உலகின் பல பகுதிகளிலும் இது பின்பற்றப்படுகிறது. அதுபோல, பெங்களூரிலும், அடர் வனம் வளர்க்க பி.எம்.ஆர்.சி.எல்., திட்டமிட்டுள்ளது.பி.எம்.ஆர்.சி.எல்., உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மியாவாகி தொழில்நுட்பத்தில், மரக்கன்றுகள் நட்டு வளர்த்தால் இரண்டு, மூன்று ஆண்டுகளில் காடாகும். இது வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும்; காற்று மாசுவை கட்டுப்படுத்தும்; பறவைகள், பட்டாம்பூச்சுகளை ஈர்க்கும்.ஏற்கனவே பிடதி அருகில், மியாவாகி வனம் உள்ளது. பெங்களூரிலும் வனம் உருவாக வேண்டும். மஹாலட்சுமி லே – அவுட்டில், இஸ்கான் கோவில் அருகில், பீன்யா டிப்போ, ஏரோஸ்பேஸ் பார்க்கில், மெட்ரோ கார்ப்பரேஷனுக்கு, சொந்தமான இடம் உள்ளது. இங்கு வனம் வளர்க்கப்படும்.அரை ஏக்கர், ஒரு ஏக்கர் இருந்தால் போதும், இந்த தொழில்நுட்பத்தில் நுாற்றுக்கணக்கான மரக்கன்றுகள் நட்டு, அடர்ந்த வனத்தை உருவாக்கலாம். ஜூலையில் பணிகள் துவங்க வாய்ப்புள்ளது. ஆறேழு மாதங்களில், மரங்களின் வளர்ச்சியை கவனித்து, நகரின் மற்ற இடங்களிலும் வனம் வளர்க்க முடியுமா என்பதை முடிவு செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement