போதை பொருள் ஹேங், மிரள வைக்கும் பைக் சாகசம், ஹாலிவுட் தரத்தில் ஆக்ஷன் : வலிமை முதல் பார்வை
வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் இரண்டாவது முறையாக இணைந்த ‛வலிமை' படம் இன்று(பிப்., 24) உலகம் முழுக்க 4000 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. இரண்டு ஆண்டுகள் கழித்து அஜித் படம் வருவதால் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். படத்தின் முதல்காட்சிக்கு பின் வலிமை படம் எப்படி இருந்தது என்பதை இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.
ஆன்லைன் மூலம் போதை பொருள் கடத்தல் நடக்கிறது. அதை நேர்மையான போலீஸ் அதிகாரியான அஜித் எப்படி தடுக்கிறார். இதன் உடன் தன் குடும்பத்தை வில்லன் பழிவாங்க துடிப்பதை எப்படி தடுக்கிறார் என்பதை அதிரடி ஆக் ஷன் நிறைந்த படமாகவும், அதன் உடன் அம்மா, தம்பி சென்டிமென்ட் கலந்து இந்த படத்தை கொடுத்துள்ளார் வினோத்.
ஆன்லைன் மூலம் போதை பொருள் கடத்தும் கும்பலை பொறி வைத்து பிடிக்கும் ஏசிபி அர்ஜுன் ரோலில் அஜித் நடித்துள்ளார். அவருக்கு துணையாக போலீஸ் அதிகாரியாக ஹூமா குரேஷி, வில்லனாக கார்த்திக் கேயா, பாவல் நவ்நீதன். அஜித்தின் தம்பியாக ராஜ் ஐயப்பா என்ற புதுமுகமும், அண்ணனாக அச்சுத குமார், அம்மாவாக சுமித்ரா, போலீஸ் அதிகாரிகளாக ஜி.எம்.சுந்தர் மற்றும் செல்வா நடித்துள்ளனர். இதுதவிர நிறைய புதுமுகங்களும் நடித்துள்ளனர்.
|
அஜித் படம் என்றாலே அதில் பைக் தொடர்பான சாகசம் இடம் பெறும். ஓரிரு காட்சிக்கே ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ஆனால் இந்த படத்தில் படம் முழுக்க பைக் சாகசம் இடம் பெற்றால் கொண்டாடமல் இருப்பார்களா. பைக் ரேஸ் சாகசங்கள், ஹாலிவுட் தரத்திலான சண்டைக்காட்சிகள் நிச்சயம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும். ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ் படம் பார்த்த உணர்வை நிச்சயம் வலிமை தரும். அதேசமயம் காதல், ரொமான்ஸ் போன்ற காட்சிகள் எதுவும் இல்லாத அஜித் படமாக இருக்கும். படத்தின் நீளம் சற்றே அதிகம். அஜித் – யுவனின் கூட்டணி இந்த படத்தில் குறைவு என்றே சொல்லலாம். என்னடா ஆக் ஷன் படம் என்கிறார்காளே அப்படின்னா குடும்பமாக ரசிகர்கள் பார்க்க மாட்டார்களா என்று கூற முடியாது. அதையும் போக்க அம்மா சென்ட்டிமென்ட், அண்ணன் – தம்பி பாச போராட்டம் ஆகியவற்றையும் கலந்து மாஸான படமாக கொடுத்துள்ளார் வினோத். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு வலிமை படம் நிச்சயம் பெரிய விருந்தாக அமையும்.