கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் மகள் கண்முன்னே ரயிலில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பள்ளியாடி பகுதியைச் சேர்ந்தவர் கொத்தனார் ரத்தினராஜ், இவருக்கு ஜெமீலா என்ற மனைவியும் ஆஸ்வின்ராஜ் என்ற மகனும், அன்மரியா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ரத்தினராஜ், தனது மகள் அன்மரியாவுடன் இரணியல் ரயில் நிலையத்துக்கு வந்தனர்.
இதையடுத்து நாகர்கோவிலில் இருந்து மங்களூரு செல்லும் பரசுராம் எஸ்பிரஸ் ரயில் இரணியல் ரெயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது, முதலில் மகள் அன்மரியா ரயிலில் ஏறினார். பின்னர் அவர்கள் கொண்டு வந்த உடமைகளை பிளாட்பாரத்தில் இருந்தபடி ரத்தினராஜ் ரெயிலில் ஏற்றினார். அதற்குள் ரயில் கிளம்பியது. அப்போது ரயிலில் ஏற முயன்ற அவர் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், அதிகாலை நேரம் என்பதால் ரயில் நிலையத்திலும், ரயிலிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இல்லை. பின்னர், சம்பவம் குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகள் கண்முன்னே தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
