போபால்: மத்தியபபிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற வைரச் சுரங்கங்கள் உள்ளன.
இந்நிலையில், பன்னா நகரின் கிஷோர்கஞ்ச் பகுதியில் வசிப்பவர் சுஷில் சுக்லா. இவர் வாடகை நிலம் ஒன்றில் சிறிய அளவில் செங்கல் சூளை தொழில்செய்து வருகிறார்.
இவர், கிருஷ்ண கல்யாண் பூர் அருகில் உள்ள ஆழமற்ற சுரங்கம் ஒன்றில் இருந்து26.11 காரட் எடை கொண்ட வைரத்தை தோண்டி எடுத்துள்ளார். இது ஓரிரு நாளில் ஏலம் விடப்பட உள்ளது. இதில் அரசுக்கான ராயல்டி மற்றும் வரி போகஎஞ்சிய தொகை சுஷில் சுக்லாவுக்கு வழங்கப்படும்.
இதுகுறித்து சுஷில் சுக்லா கூறும்போது, “கடந்த 20 ஆண்டுகளாக நானும் எனது குடும்பத்தினரும் வைரச் சுரங்கப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் இவ்வளவு பெரிய வைரத்தை தோண்டி எடுத்தது இதுவே முதல்முறை. இந்த சுரங்கத்தை 5 கூட்டாளிகளுடன் சேர்ந்து நான் குத்தகைக்கு எடுத்தேன். இந்த வைரம் ரூ.1.2 கோடிக்கு மேல் ஏலம் போகும் என நம்புகிறேன்” என்றார்.