மேற்கு வங்காள மாநில சட்டசபை மார்ச் 7ம் தேதி அதிகாலை 2 மணிக்கு கூடும் என்று அந்த மாநில ஆளுநர் ஜெகதீஷ் தங்கர் கூறியுள்ளார். மாநில அரசின் பரிந்துரைப்படி அதிகாலை 2 மணிக்கு சட்டசபை கூட்டப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநில சட்டசபையை பிப்ரவரி 12ம் தேதி திடீரென முடித்து வைத்து ஆளுநர் தங்கர் உத்தரவிட்டார். அவருக்கும், முதல்வர் மமதா பானர்ஜிக்கும் இடையே மோதல் நிலவி வந்த நிலையில் இது புதிய பஞ்சாயத்தாக உருவானது.
ஆளுநர் சட்டசபைக் கூட்டத்தை முடித்து வைத்து உத்தரவிட்டதால், மீண்டும் ஆளுநர்தான் சட்டசபைக் கூட்டத்தைக் கூட்ட முடியும். இதனால் மாநில பட்ஜெட் தாக்கல் செய்வது உள்பட பல பிரச்சினைகள் எழும் வாய்ப்பு உருவானது.
இந்த நிலையில் சட்டசபைக் கூட்டத் தொடரை கூட்டுமாறு ஆளுநருக்கு தலைமைச் செயலாளர் மூலம் மாநில அரசு பரிந்துரையை அனுப்பி வைத்தது. ஆனால் அதை ஆளுநர் அரசுக்கே திரும்பி அனுப்ப வைத்தார். சட்டசபையைக் கூட்ட வேண்டும் என்ற பரிந்துரையை, மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகே ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்பது மரபு. அதை மீறும் வகையில் மாநில அரசு நடந்து கொண்டதால் பரிந்துரையை திருப்பி அனுப்பி விட்டதாக ஆளுநர் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் மாநில அமைச்சரவையைக் கூட்டிய
மமதா பானர்ஜி
, சட்டசபையைக் கூட்ட வேண்டும் என்ற பரிந்துரைக்கு அமைச்சரவைின் ஒப்புதலைப் பெற்றார். அங்குதான் அவரது குசும்புத்தனம் வெளியானது. அதாவது மார்ச் 7ம் தேதி அதிகாலை 2 மணிக்கு சட்டசபையைக் கூட்ட வேண்டும் என்று அமைச்சரவை பரிந்துரையில் கூறப்பட்டிருந்தது.
அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநரால் மீற முடியாது என்பதால், வேறு வழியின்றி 7ம்தேதி அதிகாலை 2 மணிக்கு சட்டசபை கூடும் என்ற உத்தரவை ஆளுநர் பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், அரசியலமைப்புச் சட்டத்தின் 174 (1)வது பிரிவின் கீழ் அமைச்சரவை பரிந்துரையை ஏற்று சட்டசபையானது மார்ச் 7ம் தேதி அதிகாலை 2 மணிக்குக் கூட்டப்பட்டுள்ளது.
அதிகாலை 2 மணிக்கு சட்டசபை கூடுவது என்பது அசாதாரணமானது, வரலாற்றிலேயே இல்லாதது. இருப்பினும் இது அமைச்சரவை முடிவு என்று கூறியுள்ளார் தங்கர்.
நீங்கள் இண்டில் புகுந்தால் நாங்கள் இடுக்கில் புகுவோம் என்று மமதா பானர்ஜி ஆடும் ஆட்டத்தால் மேற்கு வங்க மாநில ஆளுநர் – முதல்வர் சண்டை தொடர் கதையாக நீண்டு கொண்டிருக்கிறது.