சென்னை: சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட நிலையில் அவர்கள் பதவியேற்பு விழாவுக்காக ரிப்பன் மாளிகை தயாராகி வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகராட்சி மற்றும் மாநகர காவல் ஆணையர்கள் நேற்று ஆய்வு செய்தனர். சென்னை மாநகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில், மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் திமுக 153 இடங்களிலும், அதிமுக 15 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா 4 இடங்களிலும், மதிமுக 2 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், அமமுக ஆகியவை தலா 1 இடங்களிலும், சுயேச்சைகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள் வரும் மார்ச் 2-ம் தேதி பதவியேற்க உள்ளனர். பதவியேற்பு விழா ரிப்பன் மாளிகையில் மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. 4-ம் தேதி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தலும் அங்கு நடைபெற உள்ளது. இதற்காக ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கம் மற்றும் மேயர் மற்றும் துணை மேயர் அறைகள், ஆலோசனை கூட்ட அரங்கம், பார்வையாளர்கள் காத்திருக்கும் அறைகள், மன்ற செயலர் அறை, நிலைக் குழு தலைவர்கள் அறை மற்றும் வெளிப்புற சுவர்களுக்கு வெள்ளை அடித்தல், மின் விளக்கு, மின் விசிறி போன்றவற்றை அமைத்தல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை மாநகராட்சி துணை ஆணையர் விஷூமகாஜன் நேற்று பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து பதவியேற்பு விழா மற்றும் மறைமுக தேர்தலை நடத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் எம்.ரவி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர். அப்போது சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார்.