அஜித்தின் திரைப்பயணத்தில் ‘முகவரி’ முக்கியமான படம். ஜோதிகா, ரகுவரன், கே.விஸ்வநாத், சித்தாரா, விவேக் என பர்ஃபாமென்ஸில் பிச்சு உதறுபவர்களுடன் அஜித்தும் அசத்தியிருப்பார். பாலகுமாரனின் வசனம், பி.சி.ஶ்ரீராமின் ஒளிப்பதிவு, தேவாவின் இசை என பல மேஜிக்குகள் இந்தப் படத்தில் உண்டு. 22 ஆண்டுகள் காணும் ‘முகவரி’க்காக அதன் இயக்குநர் வி.இசட்.துரையிடம் பேசினேன்.
“இந்தப் படத்தை இத்தனை வருஷத்துக்கு பிறகும் கொண்டாடுவாங்கன்னு நினைச்சதில்ல. அப்ப எனக்கு 22 வயசுதான். யார்கிட்டேயும் ஒர்க் பண்ணினதில்ல. சினிமா அனுபவமும் பக்குவமும் இல்லாத ஒரு வயசு. ஆனாலும் லெஜன்ட்ஸ் நிறைய பேர் இருந்தாங்க. அஜித் சார், கே.விஸ்வநாத் சார், பி.சி. சார், தேவா சார், பாலகுமாரன் சார்னு அத்தனை பேரையும் அழகா ஹேண்டில் பண்ணினதை இப்ப நினைச்சாலும் ஆச்சரியமா இருக்கும். தயாரிப்பாளர் சக்ரவர்த்தி சார் இல்லேனா இப்படி ஒரு படம் அமைஞ்சிருக்காது. அவர்தான் எனக்கு குருனு கூட சொல்லலாம்.
முதல் படம் இயக்குறவங்களுக்கு பி.சி.சார் ஒளிப்பதிவாளரா அமைஞ்சா, அந்த இயக்குநர் அதிர்ஷ்டசாலிதான். ஜோதிகாவுக்கு முன்னாடி முதல்ல கமிட் ஆனது இஷா கோபிகர்தான். மூணு நாள்கள் ஷூட் போயிட்டு வந்த பிறகு ரஷ் பார்த்தால் எல்லாருக்குமே திருப்தி. ஆனா, எனக்கோ இஷாவை அந்தக் கதாபாத்திரத்துல பார்க்க முடியல. அவங்க அழகா இருக்காங்க. பர்ஃபாமென்ஸும் நல்லா இருந்துச்சு. ஆனா, என்ன பிரச்னைனு என்னால சொல்லத் தெரியல. சக்ரவர்த்தி சார்தான் ‘இயக்குநரா உனக்கு என்ன தோணுதோ அதை பண்ணு. வேற கதாநாயகி சரியா இருக்கும்னா… முடிவு பண்ணிக்கோ’னு தைரியம் கொடுத்தார். அதன் பிறகுதான் ஜோதிகா வந்தாங்க.
மொத்த படமும் முடிச்சிட்டு டப்பிங் அப்ப, அஜித் சார் படத்தை பார்த்துட்டு சிலிர்த்தார். ‘எனக்கு மறக்க முடியாத ஒரு படம் கொடுத்திருக்கீங்க. பொதுவா நான் நடிச்ச படங்களை பார்த்துட்டு என்னால முழுசா அதுல ஜெல் ஆக முடியாது. ஏன்னா, அதுல என்னோட குறைகள் மட்டுமே தெரியும். என்னை நானே திட்டிக்குவேன். முதல் தடவையா என்னோட கரியரில் என்னை நானே உணர்றேன்.’ ஒரு படத்தோட ஹீரோ அவரே படம் பார்த்துட்டு, அஜித் மாதிரியே தெரியலை கதாபாத்திரம் ஶ்ரீதராகவே நினைச்சு பார்க்க வச்சிடுச்சுனு சிலிர்த்து சொன்ன போதே ஒரு இயக்குநரா சந்தோஷமாகிட்டேன். அவர் கைகள் புல்லரிச்சு சிலிர்த்ததை என்கிட்ட காட்டி, நெகிழ்ந்தார். அதைப் போல படத்தோட ரிலீஸுகு முன்னாடியே எனக்கொரு கார் பரிசளிச்சார். சினிமாவுல கார் பரிசளிக்கறது பெரிய விஷயமில்ல. படம் ரிலீஸ் ஆகி, ஜெயிச்ச பிறகுதான் கார் கிஃப்ட் பண்ணுவாங்க. ஆனா அஜித் சார் ‘வெற்றி, தோல்வி பெரிய விஷயமில்ல. உங்களுக்கு கார் கிஃப்ட் பண்ணுவேன்னு சொன்னேன். கிஃப்ட் பண்றேன்’ன்னார்.
படம் ரிலீஸான பிறகு நல்ல ரெஸ்பான்ஸ். படம் நல்லா இருக்கு. ஆனா, கிளைமாக்ஸை பாசிட்டிவ்வா முடிச்சா இன்னும் நல்லா இருக்கும்னு விநியோகஸ்தர்கள் சொன்னாங்க. ‘ஒரு கலைஞனோட தோல்வி, நிரந்தர தோல்வி கிடையாது. அது தற்காலிக தோல்வி’னு உணர்த்தவே இப்ப உள்ள கிளைமாக்ஸை வச்சிருந்தோம். ஆனா, நிறைய தியேட்டர்கள்ல ஆப்ரேட்டர்களே எடிட் செய்து, இருக்கற ஷாட்களை எடுத்துப்போட்டு புது கிளைமாக்ஸ் உருவாக்கிட்டாங்க. ‘திருப்பி அவன் ஜெயிச்சது மாதிரி’ சின்ன ஃபீல் கொண்டு வந்திருப்பாங்க. அஜித் நடந்து போறதோட படத்தை நான் முடிச்சிருப்பேன். ஆனா, அவர் ஜெயிச்சது மாதிரி ஆப்ரேட்டர்கள் கிளைமாக்ஸை கொண்டு போயிருப்பாங்க” எனச் சொல்லும் வி.இசட் துரை, இப்போது சுந்தர்.சி.யின் ‘தலைநகரம் 2’வின் ஐம்பது சதவிகித படப்பிடிப்பை முடித்திருக்கிறார்.