சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: சென்னையில் கடந்த ஜன. 26-ம் தேதி நடந்த குடியரசு தின விழாவில், சுதந்திர போராட்டத்தை விளக்கும் 3 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடந்தது. மாநிலம் முழுவதும் மக்கள் இதை கண்டுகளிக்கும் வகையில் பல்வேறு நகரங்களுக்கு அந்த ஊர்திகள் அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களிடையே சென்று மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த அலங்கார ஊர்திகள், சென்னை மாநகர மக்கள் கண்டு களிக்கும் வகையில் மெரினா கடற்கரை இணைப்புச் சாலையில் விவேகானந்தர் இல்லம் எதிரில் பிப்.20 முதல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் பொதுமக்கள், பள்ளி, மாணவ, மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பெருந்திரளாக இந்த அலங்கார ஊர்திகளை பார்வையிட்டு வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், பிப்.21-ம் தேதி இந்த ஊர்திகளை பார்வையிட்டு அங்கு கூடியிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார். சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, மேலும் ஒரு வாரத்துக்கு அந்த இடத்தில் அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.