ஶ்ரீதேவியின் நினைவு நாள் இன்று. ஒரு காலத்தில் இந்திய சினிமாவில் ஒரு கலக்கு கலக்கியவர். தமிழ் சினிமாவில் இன்னமும் மயிலென்றால் அவர்தான். ’16 வயதினிலே’, ‘மூன்றாம் பிறை’, ‘குரு’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ என ஶ்ரீதேவி அசத்திய படங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழில் அவர் கடைசியாக நடித்த படம் விஜய்யின் ‘புலி’ என்பதால் ஶ்ரீதேவியின் நினைவுகளை இங்கே பகிர்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.
” ‘புலி’யில் முக்கியமான ஒரு கதாபாத்திரம் யவனராணி. அந்தக் கதாபாத்திரத்திற்கு ஶ்ரீதேவி மேடம் கிடைச்சா ரொம்பப் பொருத்தமா இருக்கும்னு நினைச்சேன். மும்பைக்குப் போய், அவங்ககிட்ட கதை சொன்னேன். சின்ன வயசில இருந்து அவங்க படங்களைப் பார்த்திருப்போம். ஆனா, அவங்க ரொம்ப எளிமையா இருந்தாங்க. அவங்களே டீ ரெடி பண்ணிக் கொடுத்தாங்க. ராணி கதாபாத்திரத்தை ரொம்பவே ரசிச்சாங்க.
படத்துல அவங்களோட மேக்கப் பத்தியும் சொல்லியாகணும். காலையில ஒன்பது மணி ஷாட்னா, அதிகாலை ஐந்து மணிக்கே ரெடியாகி மேக்கப் போட ஆரம்பிச்சா ஷாட் டைமுக்கு சரியா இருக்கும். அவங்க கண்ல லென்ஸ் மாட்டியிருந்ததால, அதிக பட்சம் ஆறு மணி நேரம் வரைதான் அவங்க போர்ஷனை ஷூட் செய்யமுடியும். ஆனாலும் அவங்க மெனக்கெடல் ரொம்ப ஆச்சரியமா இருக்கும். ராணி கெட்டப்னால அவங்களோட டிரஸ் ஸ்பெஷலானது. பாலிவுட் காஸ்ட்யூம் டிசைனர் மனிஷ்மல்ஹோத்ரா உட்பட அஞ்சு பேர் அந்த டிரெஸை தாங்கிப் பிடிக்க வேண்டியிருக்கும். அவ்ளோ எடை கொண்டது. அதை அணிந்து நடிக்கறதே சவாலானது. தவிர தொடர்ச்சியா அவங்க லென்ஸ் அணிஞ்சிருந்ததால, அவங்க கண் இன்ஃபெக்ஷன் ஆகி, கண்ணீர் வர ஆரம்பிச்சிடுச்சு. ஆனாலும் அதை அவங்க பொருட்படுத்தாம நடிச்சாங்க.
அதைப் போல படத்துல க்ளைமாக்ஸ் ஃபைட்ல அவங்களுக்கு ஒரு டூப்பும் ரெடி பண்ணியிருந்தோம். இதையெல்லாம் பார்த்த அவங்க ‘எனக்கு ரெண்டு நாள் டைம் கொடுங்க’ன்னு கேட்டு, ஃபைட்டுக்கான விஷயங்களை ரெடி பண்ணிட்டு, அவங்க டூப்பை எவ்வளவு தவிர்க்கணுமோ அவ்ளோ தவிர்த்து நடிச்சாங்க.
படப்பிடிப்பு இடைவெளிகளில் அவங்ககிட்ட பேசியிருக்கேன். ‘தமிழ்ப் படங்கள் ரொம்ப ஆதர்சமான விஷயங்கள்… ஆனா, இந்திக்குப் போன பிறகு இங்கே நடிக்கறதுக்கான சூழல் அமையல. இருந்தாலும் நான் நடிச்ச படங்களை குடும்பத்தோடு உட்கார்ந்து பார்த்து ரசிப்போம்’னு சொல்வாங்க. என்னோட கரியர்ல அவங்களோட ஒர்க் பண்ணினது, மறக்க முடியாத நினைவுகளா அமைச்சிடுச்சு” என நினைவலைகளில் கரைந்தார் சிம்புதேவன்.