புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி கடந்த 2020-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இதை 3 மாதங்களுக்குப் பின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், “பல மாதங் களாக தனது மனு விசாரணைக்கு வரவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி நினை வூட்டினேன். ஆனாலும் பலன் இல்லை. முக்கியமான இந்த மனு மீது விரைவில் விசாரணை நடத்த வேண்டும்” என உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்தார்.
சுவாமியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதிஎன்.வி. ரமணா, இந்த மனு மீது மத்திய அரசு பதில் அளித்துள்ளதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கடந்த காலங்களில் அரசு பதில் அளித்துள்ளதாக சுவாமி தெரிவித்தார்.
மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரும் சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை விசாரணைக்கு ஏற்பதாகவும் மார்ச் 9-ம் தேதி மனு மீது விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்தது.- பிடிஐ