திரையரங்கு உள்ளே அனுமதிக்காமல் தாமதப்படுத்தியதாகக் கூறி ஆவேசமடைந்த ரசிகர்கள் கண்ணாடி மற்றும் மேற்கூரைகளை உடைத்தனர்.
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள ‘வலிமை’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த வார தொடக்கத்தில் ‘வலிமை’ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து திரையங்குகளிலும் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. தமிழகத்தின் பல திரையரங்குகளில் ரசிகர்களுக்காக அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிடப்பட்டன. இதனையொட்டி ஒவ்வொரு தியேட்டருக்கு முன்பாகவும் பட்டாசு வெடித்து, மேள தாளங்கள் முழங்க நடிகர் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள வலிமை திரைப்படம் 5 திரைகளில் திரையிடப்பட்டது. இதையடுத்து இன்று அதிகாலை 1 மணி முதலே ரசிகர்கள் ஆர்வமுடன் திரைப்படம் பார்க்க உற்சாகத்துடன் வந்தனர். முதல்காட்சி அநிகாலை 4:00 மணிக்கு திரையிட வேண்டிய காட்சி ஒருமணி நேரம் வரை தாமதமானது. இதனால் ஆவேசமடைந்த கோபம் அடைந்த ரசிகர்கள் திரையரங்கின் டிக்கெட் கவுண்ட்டர் முன்பு ஃபால்சீலிங் மற்றும் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
இதேபோல் 7:30 மணிக்கு திரையிட வேண்டிய காட்சி 8 மணிக்கு திரையிடப்பட்டதால் அந்த காட்சிக்கு வந்து காத்திருந்த ரசிகர்களும் ஆவேசமடைந்து இதேபோன்று திரையரங்க வளாகத்தை சேதப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து உடனடியாக ரசிகர்கள் திரையரங்கிற்கு அனுமதிக்கப்பட்டதை அடுத்து இயல்பு நிலை திரும்பியது.
கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளால் திரையரங்கங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்குமார் படத்தைத் திரையில் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் திரையரங்கம் முன்பாக பரபரப்பு நிலவியது.
இதையும் படிக்கலாம்: நாமக்கல்: ‘வலிமை’ முதல் காட்சி வெளியிட தாமதமானதால் தியேட்டரில் நாட்டு வெடி வெடிக்க முயற்சி