சென்னை மாநகரில் செயின் பறிப்புகளும், கொலைகளும், போதை மருந்து ஊடுருவலும் அதிகரிக்கின்றன. மதுரையிலிருந்து மாற்றலாகி வரும் அசிஸ்டென்ட் கமிஷனர் அர்ஜுன், தன் புத்திசாலித்தனமான விசாரணையின் மூலம் இதற்குப் பின் இருக்கும் பைக்கர்ஸ் கேங்கைக் கண்டறிகிறார். அதை இயக்கும் தலைவனையும் நெருங்குகிறார். அடுத்தடுத்த சவால்களைக் கடந்து அவர் தன் ‘வலிமை’யால் வில்லனை வென்றாரா என்பதுதான் ‘வலிமை’ படத்தின் கதை.
‘என்னை அறிந்தால்’ படத்துக்குப் பிறகு, மீண்டும் அதே ஃபிட்டான, ஸ்மார்ட்டான இன்னமும் யங்கான ஒரு போலீஸ் அதிகாரியாக வந்து நிற்கிறார் அஜித். நீண்ட காலமாக தன் அடையாளமாக இருந்த ‘சால்ட் அண்ட் பெப்பர்’ லுக்கையும் இதில் முழுமையாகத் தவிர்த்திருக்கிறார். படத்தில் பைக் ரேஸ் நிறைய இருப்பதாலோ என்னவோ ஸ்டன்ட் காட்சிகளுக்குத் தன் 200 சதவிகித உழைப்பைக் கொடுத்திருக்கிறார். இடைவேளையை நெருங்கும்போது வரும் சண்டைக் காட்சிகளாகட்டும், இடைவேளை முடிந்து வரும் அந்த போலீஸ் வேன், பைக்கர்ஸ் சண்டையாகட்டும்… திரையரங்கம் அதிரும்படி மாஸ் மீட்டரை ஏற்றியிருக்கிறார் அஜித்.
ஹுமா குரேஷி தனக்குத் தரப்பட்ட அந்த ஒற்றை சண்டைக் காட்சியில் ஈர்க்கிறார். ஆனால், இரண்டாம் பாதியில் உயரதிகாரியாக மாறும் அவரை வைத்து சென்டிமென்ட் காட்சிக்கு முயன்றிருப்பது அவர் கதாபாத்திரத்தின் தன்மையை முழுமையாகச் சிதைத்துவிடுகிறது.
வில்லனாகத் தெலுங்கிலிருந்து இறக்குமதியாகி இருக்கும் கார்த்திகேயா. ஸ்டன்ட் காட்சிகள், பைக்கர்ஸின் ஃபிட்னஸ், உடல்மொழி என எல்லாமே பக்காவாகப் பொருந்திப் போனாலும், அவரின் கதாபாத்திரம் எழுதப்பட்ட விதம் மற்றுமொரு டெம்ப்ளேட் தமிழ் சினிமா வில்லனாக மட்டுமே அவரை நம் கண்முன் நிறுத்துகிறது. ஒருபுறம் புத்திசாலித்தனமாகக் காய்களை நகர்த்தும் காவல் அதிகாரி அஜித்தின் முன், இவர் செய்வது அதிகபட்சம் அவரின் குடும்பத்தை வைத்து ப்ளாக்மெயில் செய்வது மட்டுமே. ஸ்டன்ட் காட்சிகளுக்கு யோசித்ததைப் போல, இவர் கதாபாத்திர வளர்ச்சிக்கும் கொஞ்சம் உட்கார்ந்து யோசித்திருக்கலாம்.
டாக்குமென்ட்ரி சாயலுடன் தொடங்கும் முதல் பாதி, பின்னர் குடும்ப ரூட் பிடித்துத் தடுமாறுகிறது. அதன் பின்னர், பைக்கர்ஸ் கேங் குறித்தான விசாரணை அனல் பறக்க… நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். இரண்டாம் பாதியின் துவக்கத்தில் வரும் அந்த நீண்ட ஹைவே சேஸிங் காட்சி பிரமிக்க வைக்கிறது. அதற்காக உழைத்த நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு டீம் மற்றும் திலீப் சுப்பராயனின் ஸ்டன்ட் டீம் ஆகியோரின் உழைப்பு பாராட்டத்தக்கது. சரியான திட்டமிடலும் அதற்கான உழைப்பும் இருந்தால் ஹாலிவுட் பாணியிலான ஸ்டன்ட் காட்சிகள் நம் தமிழ் சினிமாவிலும் சாத்தியம் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத்.
என்கவுன்ட்டரே கூடாது என்று சொல்லும் காவல் அதிகாரி ஒருவரை ஒரு மாஸ் சினிமாவின் நாயகனாகப் பார்ப்பது மகிழ்ச்சியான ஒன்றுதான் என்றாலும், சட்டத்துக்கு வெளியே ரவுடிகளின் கை, கால்களை உடைத்துக் கட்டுப் போடுவது மட்டும் எந்த விதத்தில் நியாயம் என்பது புரியவில்லை. அதற்கு அவர் கொடுக்கும் விளக்கமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. ‘உயிரை எடுக்கறது பாவம்’ என்று நியாயம் பேசிவிட்டு, பின்னர் நாயகனே சேஸிங்கில் பாம்களைத் தூக்கிப்போட்டு விளையாடியிருப்பதும் ஜீரணிக்க முடியாத ஒன்று. இப்படிச் சித்தாந்த ரீதியாகவும் சில குழப்பங்கள் ஆங்காங்கே எட்டிப் பார்க்கின்றன.
“ஏழையா இருந்து கஷ்டப்பட்டு உழைக்கிறவன கேவலப்படுத்தாத” என்பது போன்ற இடங்களில் வசனங்கள் ஈர்க்கவும் செய்கின்றன, சென்டிமென்ட் காட்சிகளில் சோதிக்கவும் செய்கின்றன.
அம்மா சென்டிமென்ட், தம்பி சென்டிமென்ட், அண்ணன் சென்டிமென்ட் என இடையில் வேறு தெளிய வைத்துத் தெளிய வைத்து அடித்திருக்கிறார்கள். அம்மாவுக்காக இரண்டு சென்டிமென்ட் பாடல்கள் என்பதும் ஓவர்டோஸ். இப்படியான ஆக்ஷன் த்ரில்லர் கதைக்கு இத்தகைய சென்டிமென்ட் காட்சிகள் கொஞ்சமும் பொருந்தவில்லை. யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இசைக்கான கிரெடிட்ஸும், ஜிப்ரானுக்கு நன்றியும் போட்டிருக்கிறார்கள். ஆனால், இரண்டு பேர் இருந்தும் படத்தின் பின்னணி இசை சுமார் ரகமே!
மூன்று மணிநேரம் ஓடும் படத்தில், சென்டிமென்ட்டைக் குறைத்து, ஆக்ஷனை அதிகரித்து, எடுத்துக்கொண்ட கதையைச் சமரசமின்றி சொல்லியிருந்தாலே எல்லோருக்குமான ட்ரீட்டாக அமைந்திருக்கும் இந்த ‘வலிமை’. இப்போது ‘ரசிகர்களுக்காக மட்டுமே’ எனத் தன் வெளியைச் சுருக்கிக் கொண்டிருக்கிறது.