புதுடெல்லி: தனது கார் டிரைவர், வீட்டுப் பணியாளர் மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு 9 லட்சம் பங்குகளை பரிசாக அளிப்பதாக ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி வி. வைத்யநாதன் தெரிவித்துள்ளார்.
தனது பயிற்சியாளருக்கு 3 லட்சம் பங்குகளும், வீட்டுப் பணியாளர் மற்றும் டிரைவருக்கு தலா 2 லட்சம் பங்குகளும், அலுவலக உதவியாளர் மற்றும் வீட்டு உதவியாளருக்கு தலா ஒரு லட்சம் பங்குகளும் பரிசாக அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மொத்தம் 9 லட்சம் பங்குகளை அவர் இவ்விதம் வழங்கியுள்ளதாகசெபி-க்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.3.95 கோடியாகும்.
இவர்கள் அனைவரும் வைத்யநாதனுக்கு உறவினர்கள் அல்ல.செபி- விதிமுறைகள்படி உறவினர்களுக்கு பங்குகளை அளிப்பதற்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. இவர்கள் வீடு வாங்குவதற்கு உதவியாக இருக்கும் எனக் கருதி நல்லெண்ண அடிப்படையில் பங்குகளை பரிசாக அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுதவிர சமூக சேவை பணிகளுக்கு பயன்படுத்த வசதியாகருக்மணி நலவாரிய அறக் கட்டளைக்கு 2 லட்சம் பங்கு களை நன்கொடையாக வழங்கி யுள்ளதாக ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி தெரிவித்துள்ளது.
மொத்தம் நன்கொடை மற்றும் பரிசாக 11 லட்சம் பங்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பரிவர்த்தனையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வி. வைத்தியநாதனுக்கு எவ்வித ஆதாயமும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை பங்குச் சந்தை வர்த்தகம் முடிவில் ரூ.43.90 என்ற விலையில் ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கிப்பங்குகள் வர்த்தகமாயின. இவற்றின் மதிப்பு ரூ.3.95 கோடியாகும். ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் பதற்றம் காரணமாக ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கிப் பங்குகள் 2.39% சரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.