இந்தியாவின் பெண் சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2018, பிப்ரவரி 24, துபாயில் அவர் இறந்ததாகச் செய்திகள் வெளியாகின.
ஸ்ரீதேவி, கணவர் போனி கபூர், மகள் குஷி மூவரும் பிப்ரவரி 20 துபாயில் நடந்த போனி கபூரின் சகோதரர் மகனும் நடிகருமான மோஹித் மர்வா திருமணத்தில் கலந்து கொண்டனர்.
திருமணம் முடித்து பிப்ரவரி 21 போனி கபூரும் குஷியும் இந்தியா திரும்பி விட ஸ்ரீ தேவி மட்டும் துபாயில் தனித்திருந்தார்.
ஸ்ரீ தேவி தன்னுடைய மகள் ஜான்விக்கு சில பொருள்கள் வாங்கவிருந்ததால் அங்கேயே தங்கியதாகவும் போனி கபூருக்கு இந்தியாவில் நிகழ்ச்சிகள் இருந்ததால் அவர் திரும்பியதாகவும் சொல்லப்படுகிறது.
ஸ்ரீதேவி ஏற்கெனவே தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து இன்னொரு ஹோட்டலுக்கு மாறியபோது அவரின் அலைபேசியை மறந்துவிட்டதால் அறையிலேயே முடங்கியதாகவும் சொல்லப்பட்டது.
பிப்ரவரி 21 முதல் பிப்ரவரி 24 வரை 72 மணிநேரத்திற்கு மேலாக ஸ்ரீதேவி அறையை விட்டு வெளியே வரவில்லை.
பிப்ரவரி 24 போனி கபூர் ஸ்ரீதேவியை சர்ப்ரைஸ் செய்வதற்காக மீண்டும் துபாய்க்குச் சென்றதாக தன் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
இருவரும் வெளியே செல்வதற்காகக் கிளம்பும் போது ஸ்ரீதேவி குளிக்கச் சென்று விட்டு நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகம் அடைந்த போனி குளியலறையைச் சோதித்த போது ஸ்ரீதேவி அங்கு இறந்து கிடந்தார்.
ஸ்ரீதேவி மாரடைப்பால் இறந்ததாகச் சொல்லப்பட்டது. துபாய் அரசு இது எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தே என அதிகாரபூர்வமாக செய்தி வெளியிட்டது.
ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவிற்கு பிப்ரவரி 27 கொண்டு வரப்பட்டது. அவரது இறுதி சடங்குகள் பிப்ரவரி 28 நிறைவேற்றப்பட்டது.
“எனக்கு இருக்கிற சில நண்பர்களில் முக்கியமானவர். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது” என ரஜினி தன்னுடைய இரங்கலைத் தெரிவித்தார்.
’16 வயதினிலே’ தொடங்கி அஜித் கௌரவ வேடத்தில் நடித்த ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ வரை ஸ்ரீதேவி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.