பெங்களூரு: கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு கன்னட நடிகரும் சமூக ஆர்வலருமான சேத்தன் குமார் அஹிம்சா எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும் இவ்வழக்கை விசாரிக்கும் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா தீக் ஷித், ஜே.எம்.காஷி ஆகியோர் அடங்கிய அமர்வின் விசாரணை முறையையும் அவர் விமர்சித்தார்.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள சேஷாத்ரிபுரம் போலீஸார் தாமாக முன்வந்து சேத்தன் மீது இந்திய தண்டனை சட்டம் 505 (2) (இடையூறு ஏற்படுத்தும் கருத்தை வெளியிடுதல்), 504 (உள்நோக்கத் தோடு அவமதித்தல்) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் கைது செய்தனர்.
நடிகர் சேத்தனின் கைதுக்கு சமூக ஆர்வலர்கள், தலித் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே அவரது மனைவி மேகா, ‘‘சேத்தனை காணவில்லை. அரசியல் எதிரிகள் அவரை கடத்தி இருக்கலாம். அவரை கண்டு பிடித்துதரவேண்டும்’’ என்று போலீஸில் புகார் அளித்துள்ளார்.