லக்னோ:
இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் 20 ஓவர் போட்டி லக்னோவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 56 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 89 ரன்கள் குவித்தார். ரோகித் சர்மா 44 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழக்காமல் 57 ரன்களும் சேர்த்தனர்.
இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் துவக்கத்திலேயே தடுமாறியது. துவக்க வீரர் நிசங்கா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அதன்பின்னரும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.
60 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகள் இழந்த நிலையில், போராடிய அசலங்கா அரை சதம் கடந்து ஆறுதல் அளித்தார். எனினும் இலங்கை அணியால் இலக்கை எட்ட முடியவில்லை.
20 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களே சேர்த்தது. அசலங்கா 53 ரன்களுடனும், சமீரா 24 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் புவனேஸ்வர் குமார், ஸ்ரேயாஸ் அய்யர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இந்த வெற்றியின்மூலம் மூன்று போட்டி கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி 26ம் தேதி தரம்சாலாவில் நடக்கிறது.