சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிகபட்சமாக 87 சதவீதம் வாக்குகள் பதிவான 17 வது வார்டில், 50 ஆண்டுகளில் முதன்முறையாக அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 17 வது தனி வார்டு வடபெரும்பாக்கம் மற்றும் தீயம்பாக்கம் பகுதிகளை உள்ளடக்கியது.
இங்கு திமுக சார்பில் கவிதா நாராயணன் என்பவரும், அதிமுக சார்பில் ஜெய்சங்கர் என்பவரும் போட்டியிட்டனர்.
4 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட இந்த வார்டில் 3500 க்கு அதிகமான வாக்குகள் பதிவானது. சராசரியாக 50 சதவீதத்தை கூட தாண்டாத மாநகராட்சி வார்டுகளின் மத்தியில் அதிகபட்சமாக 87 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
இந்த வார்டில் வெற்றி பெற்றால் கவிதா மேயர் ஆவதற்கான வாய்ப்புகள் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் 123 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ஜெய்சங்கர் வெற்றியை தனதாக்கினார்.
கடந்த 50 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் இந்த பகுதியில் அதிமுக முதல் முறையாக வெற்றி பெற்று இருப்பதாக ஜெய்சங்கர் மகிழ்ச்சி தெரிவித்தார்
இதற்கிடையே மாதவரம் தொகுதியில், பகுதி செயலாளர் பரந்தாமன் பொறுப்பில் இருந்த 17, 23,24 ஆகிய 3 வார்டுகளிலும் உள்கட்சி பிரச்சனையால் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிவாய்ப்பை இழந்ததாக திமுகவினர் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.