உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும், சர்வதேச அமைப்புகளும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டையே பெரும்பாலான நாடுகளும் கொண்டுள்ளன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ரஷ்ய படைகள், உக்ரைனை தீவிரமாக தாக்கத் தொடங்கியுள்ளன. உக்ரைன் ராணுவ வீரர்கள் தங்களது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார்.
இதனிடையே, ரஷ்யா தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலால் உயிரிழப்புகள் குறித்த தகவல்களும் வந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் குறித்த உலக நாடுகளின் பார்வை இதோ…
அமெரிக்கா: “உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் நிச்சயமாக மனித உயிர்களுக்கு பேரிழப்பு ஏற்படும். இதற்கு உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவையே பொறுப்பாக்கும். இந்தத் தாக்குதல் நியாயமற்றது.”
ஜெர்மனி: “உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் அப்பட்டமான விதிமீறல்.”
ஐக்கிய நாடுகள் சபை: “போரின் விளைவுகள் உக்ரைனுக்குப் பேரழிவை ஏற்படுத்தும்; உலகப் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும். ரஷ்ய அதிபரே… மனிதாபிமான அடிப்படையில் உங்களது படைகளைத் திரும்ப பெறுங்கள்.”
பிரிட்டன்: “உக்ரைன் மீது இந்தத் தாக்குதலை நடத்தியதன் மூலம் ரத்தம் சிந்தும் அழிவுப் பாதையை ரஷ்ய அதிபர் தேர்ந்தெடுத்துள்ளார்.”
ஐரோப்பிய யூனியன்: “இந்த கடுமையான நேரத்தில், உக்ரைனின் அப்பாவிப் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் பக்கம் நிற்கிறோம். உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ரஷ்யா கடுமையான விளைவுகளை சந்திக்கும்.”
நேட்டோ: “இறையாண்மை மற்றும் சுதந்திர நாட்டிற்கு எதிரான ஆக்கிரமிப்புப் பாதையை ரஷ்யா தேர்ந்தெடுத்துள்ளது.”
செக் குடியரசு: “ரஷ்யாவின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது, சர்வதேச சட்டத்திற்கு முரணானது.”
சீனா: “உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்துவதால், அங்குள்ள சீன மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.”
போலந்து: “ரஷ்யாவின் குற்ற நடவடிக்கைக்கு எதிராக நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
ஹங்கேரி: “இப்போதைய பணி, எப்போதும் போல் ஹங்கேரிய மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதாகும். உக்ரைனில் உள்ள ஹங்கேரி தூதரகத்தை ஹங்கேரி மக்கள் தொடர்பு கொள்ளுங்கள்.”
ஆஸ்திரேலியா: “சட்டவிரோதமான, தேவையற்ற, நியாயமற்ற தாக்குதல்கள். இந்த அச்சுறுத்தலுக்கு நிச்சயம் விலை உண்டு.”
பிரான்ஸ்: “ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும். பிரான்ஸ் உக்ரைனுடன் நிற்கிறது.”
ஸ்பெயின்: “உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.”
கனடா: “இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீதான மீறல். இந்த பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான செயல்கள் தண்டிக்கப்பட கூடியது.”