அண்டை நாடுகளின் எல்லைக்கு வர உத்தரவு இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானங்கள் ஏற்பாடு: முழு செலவையும் அரசே ஏற்கிறது

உக்ரைனில் இந்தியர்கள், இந்திய மாணவர்கள் 20 ஆயிரம் பேர் சிக்கியுள்ளனர். இவர்களில் 4 ஆயிரம் பேர் ஏற்கனவே நாடு திரும்பி விட்டதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. உக்ரைன் தனது நாட்டு வான் எல்லையை மூடி விட்டதால், மற்றவர்களை மீட்க சென்ற இந்திய சிறப்பு விமானங்கள் நேற்று முன்தினம் திரும்பி வந்து விட்டன. தலைநகர் கீவ்வில் ரஷ்ய படைகள் நுழைந்து இருப்பதால், இவர்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இவர்களை உடனடியாக மீட்கும்படி, இந்தியாவில் உள்ள குடும்பத்தினர்களும் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். உக்ரைனை மூன்று திசைகளிலும் சுற்றிவளைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதால், இவர்களை சாலை மார்க்கமாக அண்டை நாடுகளின் எல்லைகளுக்கு வரும்படி ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.இதன்படி, உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, போலந்து, ஸ்லோவேகியா, ருமேனியா ஆகியவற்றின் எல்லைகளில் இவர்களின் வருகைக்காக அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் குழு காத்திருக்கிறது.  எல்லையை கடந்து வரும் இந்திய மாணவர்களும், மற்றவர்களும் விமான  நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இவர்களை அழைத்து வருவதற்காக சிறப்பு விமானங்களை அனுப்பும் ஏற்பாடுகளை ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை தீவிரமாக செய்து வருகிறது. மேலும், இவர்களை அழைத்து வருவதற்கான மொத்த செலவையும் அரசே ஏற்கும் என்றும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.ரஷ்ய படைகள் பாதுகாப்பில் 400 மாணவர்கள்: தலைநகர் கீவ்வில் ரஷ்ய படைகள் நுழைந்துள்ள நிலையில், அவை பிடித்துள்ள கட்டிடத்தின் அடித்தளத்தில் 400 இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை அழைத்து செல்லும்படி உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை ரஷ்ய ராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.