முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் அவர்களை மற்றொரு வழக்கில் கைது செய்து அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் தி.மு.க. அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாரம் கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது. அதிக அதிகாரம் அளவு கடந்த போதையைத் தரும். அதிகாரத்தைக் கையாண்டு ஒரு முறை அனுபவப்பட்டுவிட்டவர்கள், வெகு சுலபத்தில் அதனைக் கைவிடத்துணியார். மக்களாட்சி முறைக்கு இது முற்றிலும் புறம்பானது.” என்றார் பேரறிஞர் அண்ணா . பேரறிஞர் அண்ணா அவர்களின் அமுதமொழிக்கு முற்றிலும் புறம்பான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்து வருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பது கடந்த பத்து மாத கால தி.மு.க. ஆட்சியில் கொடிகட்டி பறக்கிறது.
கள்ள ஓட்டு போட முயன்ற தி.மு.க.வைச் சேர்ந்தவரை கையும்; களவுமாக பிடித்துக் கொடுத்தார் என்பதற்காக முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளரும், வட சென்னை தெற்கு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான திரு. டி. ஜெயக்குமார் அவர்கள் மீது பல பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு கைதும் செய்யப்பட்டார். அதனை அவர் சட்ட ரீதியாக . சந்தித்து வருகிறார். இந்தச் சூழ்நிலையில், திரு. டி. ஜெயக்குமார் அவர்கள் மீது தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட பல பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மீண்டும் நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் அவருக்கு பிணை கிடைத்துவிட்டது என்பது வேறு விஷயம், அதே சமயத்தில், இதன்மூலம் அரசியல் காழ்ப்புணர்ச்சி வெட்ட வெளிச்சமாகிவிட்டதும், காவல் துறையினர் ஒருதலைபட்சமாக செயல்படுவதும் அம்பலமாகிவிட்டது.
ஒமைக்ரான் தொற்று நோய் உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்த சமயத்தில், இந்தத் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் இருந்து கொண்டிருந்த நேரத்தில், இதன் காரணமாக பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டிருந்த நேரத்தில், தஞ்சாவூரிலும், திருச்சியிலும் பெருந்திரளான கூட்டங்கள் கூட்டப்பட்டு அதில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில், அவரே அமைச்சர் நேரு அவர்கள் ஒரு மக்கள் கடலை இங்கே உருவாக்கியிருக்கிறார் என்று பேசி இருக்கிறார். அப்படியென்றால், ஒமைக்ரான் தொற்று நோய் உச்சத்தில் இருக்கும்போது கடல் அலை போல் திருச்சியிலும், தஞ்சாவூரிலும் கூட்டப்பட்ட கூட்டங்களை நடத்தியவர்கள் மீதும், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மீதும் தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
ஒமைக்ரான் தொற்று நோயின் பாதிப்பு இறங்குமுகத்தில் இருக்கின்ற சூழ்நிலையில், இதனையொட்டி, அரசே பல தளர்வுகளை அறிவித்து அவைகள் எல்லாம் நடைமுறைக்கு வந்துவிட்ட சூழ்நிலையில், தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் அன்புச் சகோதரர் திரு. ஜெயக்குமார் அவர்கள் – மீது வழக்குப் பதிவு செய்திருப்பதையும், தொற்று நோயின் தாக்கம் உச்சகட்டத்தில், ஏறுமுகத்தில் இருந்த சமயத்தில் கடல் அலை போல் மக்கள் வெள்ளம் கூடியிருந்த கூட்டத்தில் பங்கேற்ற மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்களின்மீது வழக்குப் பதிவு செய்யாததையும் ஒப்பிட்டுப் . பார்க்கும்போது தி.மு.க. அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி வெளிப்படுகிறது. இது தி.மு.க. அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், முன்னாள் அமைச்சர் அவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயல்.
தி.மு.க. அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கும், அதிகார துஷ்பிரயோகத்திற்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிக்கேற்ப அதிகாரத்தை பயன்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.