சென்னை:
தேசிய தரவு மற்றும் கிளவுட் வரைவு கொள்கை குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தற்போது 80 கோடி இந்தியர்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் படிப்பு முதல் வேலை, பொழுதுபோக்கு வரை பல்வேறு நோக்கங்களுக்காக 1.2 பில்லியன் இந்தியர்கள் இணையத்தைப் பயன்படுத்துவார்கள். இத்தகைய சூழ்நிலையில், இணைய பாதுகாப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இணையத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு மத்திய அரசு பல அமைப்புகளை உருவாக்கியுள்ளது.
மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இணையம் தவிர்க்க முடியாததாகி வருவதால், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதைத் தவிர, இணையவெளியை பாதுகாப்பானதாக்க, மத்திய அரசு மாநில அரசுகளுடனும் இணைந்து செயல்படுகிறது.
உலக தரவு மற்றும் கிளவுட் தொழில்நுட்பத்தை இந்தியா வழிநடத்தும் தருணம் வந்துவிட்டது. உலகம் அடுத்த தலைமுறைக்கு நகர்ந்து வரும் நிலையில், ஸ்டார்ட்-அப் களுக்கு பரந்த வாய்ப்பை இந்த கொள்கை வழங்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.