சென்னை: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் தாயகம் திரும்புவதற்கான பயண செலவை அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், பொது மக்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில், ‛தமிழகத்தை சேர்ந்த தொழில்முறை படிப்புகள் பயிலும் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் மற்றும் மாநிலத்தில் இருந்து அங்கு குடியேறியவர்கள் உக்ரைனில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‛உக்ரைனில் படிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் 916 பேர் தமிழக அரசை தொடர்பு கொண்டுள்ளனர். தமிழக மாணவர்கள், அங்கு பணியாற்றும் தமிழர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள். உக்ரைனில் மாணவர்கள், பணி நிமித்தமாக உள்ளவர்கள் என 5 ஆயிரம் தமிழர்கள் உள்ளனர். 5 ஆயிரம் பேரை மீட்டு வர தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உக்ரைனில் உள்ள மாணவர்கள் தமிழகம் திரும்புவதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும்.’ இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.
Advertisement