உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நேற்று போர் தொடுத்தது. சரமாரியாக குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழகம், தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் உக்ரைனில் சிக்கி உள்ளனர். இவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் தமிழகம் திரும்பும் பயணச் செலவை தமிழக அரசு ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தொடர்ந்து, மாணவர்கள் தெலுங்கானா திரும்பும் முழு பயணச் செலவையும் அரசே ஏற்கும் என தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் மற்றும் குடிமக்களுக்கு உதவ தெலுங்கானா அரசு புது தில்லி மற்றும் மாநில செயலகம் ஹைதராபாத்தில் ஹெல்ப்லைன்களை அமைத்துள்ளது.
இதுகுறித்து தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமராவ் கூறியதாவது:-
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை அழைத்துவர சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்யுமாறு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். மாணவர்களின் முழு பயணச் செலவையும் ஏற்க தெலுங்கானா அரசு தயாராக உள்ளது. இதனால், மாணவர்களை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வீட்டிற்கு அழைத்து வர முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. கீவ் நகருக்குள் நுழைந்த ரஷிய ராணுவம்: கடும் சண்டை