உக்ரைனில் போர் உச்சக் கட்டத்தை எட்டி உள்ளது. அங்கு படித்து வரும் தமிழக மாணவ- மாணவிகள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். இதையடுத்து அவர்களது பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளை உடனடியாக மீட்டு பத்திரமாக ஊருக்கு அழைத்து வர வேண்டும் என்று கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும் உக்ரைனுக்கு சென்று படித்து வருகிறார்கள். அவர்கள் யார், யார் என்பது பற்றிய விவரம் வருமாறு:-
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர் வேட்டரியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ராஜ்மோகனின் 2-வது மகள் அனுசியா உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் மருத்துவம் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக அங்கிருந்து வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார். எனவே அவரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அவரது சகோதரி சிந்தியா கூறுகையில், தற்போதுள்ள சூழலில் அனுசியாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள கூட முடியவில்லை. அவரது பாதுகாப்பை உறுதி செய்து உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடக்கை வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரபட்டியைச் சேர்ந்த பாலகுரு மகன் ராஜசந்தர். உக்ரைனில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் விடுமுறையில் பழனி வந்தார். டிசம்பர் மாதம் திரும்பிச் சென்ற நிலையில் தற்போது அங்கு ஏற்பட்டுள்ள சூழல் எங்கள் குடும்பத்தை கவலையடைய வைத்துள்ளது என்று அவரது தந்தை தெரிவித்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த ரவி சந்திரன் மகன் ஹரீஸ், பிரபாவதி மகள் மவுனிகா, செல்வம் மகன் அருள் பிரசாத் ஆகியோரும் உக்ரைனில் தங்கியுள்ளனர்.
அவர்களது பெற்றோர்கள் கூறும்போது, ‘‘பழனியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கீவ் நகரில் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் உக்ரைன் நாட்டில் படிப்பு மற்றும் பணி நிமித்தமாக சென்றுள்ளனர். அங்கு ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தால் அவர்களது உயிருக்கு பாதுகாப்பு இருக்குமா? என்ற அச்சம் நிலவுகிறது. எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக அவர்களை மீட்க வேண்டும்’’ என்றனர்.
தேனி பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் ரோஹித்குமார் உக்ரைனில் உள்ள பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் பட்டபடிப்பு படித்து வருகிறார். தற்போது அங்கு நிலவும் போர் பதட்டத்தால் தங்கள் மகனை உடனடியாக மீட்டு தர வேண்டும் என்று அவரது தந்தை சரவணன், தாய் வசந்தி ஆகியோர் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், 4 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் வந்த எனது மகன் தற்போது நலமாக உள்ளாரா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பாதாள அறையில் தங்கி இருப்பது போன்ற காட்சிகள் வெளி வரும் போது எங்கள் நெஞ்சை பதை பதைக்க வைத்துள்ளது. எனவே அங்கு பயிலும் மாணவ- மாணவிகள் அனைவரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சேகரின் மகன் சரவணன் உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.
உக்ரைனில் இருந்து அவர் இந்தியா திரும்பமுடியாமல் அங்கு தவித்து வருகின்றார். இதனால் சரவணனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் நாமக்கல் மாணவன் உள்பட அங்குள்ள இந்தியர்களை மீட்டு, சிறப்பு விமானம் மூலம் இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக நாமக்கல் எம்.பி. சின்ராஜ் மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சக்கராபுரம் காலனியை சேர்ந்த சேகர்-விஜய லட்சுமி ஆகியோரின் மகன் முத்தமிழன் என்பவரும் உக்ரைனில் மருத்துவம் படித்து வருகிறார். அவரும் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.
அவரை மீட்டு பத்திரமாக தமிழ்நாட்டுக்கு அழைத்துவர வேண்டும் என்று அவரது பெற்றோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த நாகராஜின் மகள் மவுனிசுகிதா. உக்ரைனில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். தற்போது அவர் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவ, மாணவிகள் 25 பேருடன் தங்கி உள்ளார். தற்போது அங்கு போர் நடந்து வரும் சூழலில் மாணவி மவுனிசுகிதா தனது பெற்றோரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது போர் நடந்து வருவதால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இந்தியா திரும்ப முன்பதிவு செய்தோம். ஆனால் விமானங்கள் அனைத்தும் ரத்தானதால் நாங்கள் நாடு திரும்ப முடியவில்லை. என்று கூறி வேதனைப்பட்டுள்ளார்.
இதையடுத்து மாணவியின் தந்தை நாகராஜ் தனது மகள் மற்றும் அவருடன் சிக்கி தவிக்கும் மருத்துவ மாணவ, மாணவிகளை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு மூலப்பாளையத்தைச் சேர்ந்தவர் மணிவாசகன். இவரது மகன் திவ்யவரதன். இவர் உக்ரைனில் உள்ள கார்க்கிவ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.
அவர் தனது பெற்றோரிடம் வீடியோ கால் மூலம் பேசினார். நான் இங்கு நலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன். 24 மணி நேரமும் வெடிகுண்டு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. நான் எனது நண்பர்களுடன் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கிறேன். பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. ராணுவத்தினர் மட்டுமே சாலைகளில் ஆயுதங்களுடன் சுற்றி வருகின்றனர்.
உக்ரைன் நகர சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. எனவே இந்த அச்சமான சூழ்நிலையில் இருந்து என்னையும் என்னுடன் தங்கி உள்ள மற்ற மருத்துவ மாணவர்களையும் பத்திரமாக மீட்டு இந்தியா கொண்டு வர மத்திய அரசும், மாநில அரசும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
நெல்லை டக்கரம்மாள்புரத்தை சேர்ந்த செல்வின் என்பவரது மகன் மனோ உக்ரைனில் டாக்டருக்கு படித்து வருகிறார். அவரை மீட்டுத்தர .உதவ வேண்டும் என்று மனோவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தங்களது மகனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் பெரும்காமநல்லூரை சேர்ந்த கபில்நாத், உசிலம்பட்டியை சேர்ந்த தீபன்சக்கவர்த்தி ஆகியோரும் உக்ரைனில் மருத்துவம் படித்து வருகிறார்கள். அவர்களும் தமிழகம் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து இருவரது பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சியை அடுத்து திருவள்ளுவர் அவென்யூ பகுதியை சேர்ந்த மாணவன் சந்தோஷ் உக்ரைனில் டிப்ளமோ படித்து வருகிறார். திருச்சி திருவெறும்பூர் முல்லைக்குடியை சேர்ந்த அஜித் என்ற வாலிபரும் உக்ரைனில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படித்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம்மடக்கு கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் உக்ரைனில் டாக்டருக்கு படித்து வருகிறார். இவர்கள் 3 பேரும் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். இவர்களை மீட்கவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து கண்ணீருடன் காத்திருக்கிறார்கள்.
கோவை மாவட்டம் சூளூரை சேர்ந்த மாணவி ரஞ்சனி, கருமத்தம்பட்டியை சேர்ந்த மாணவி பார்கவி, நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள குளப்பள்ளியை சேர்ந்த மாணவி சாய்பிரியா ஆகியோரும் உக்ரைனில் தவித்து வருகிறார்கள். இவர்கள் 3 பேரையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள்… ரஷியாவிடம் இருந்து கீவ் விமான நிலையத்தை மீண்டும் கைப்பற்றியது உக்ரைன்